திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், 35 லட்சம் மதிப்புள்ள தங்கம், 96 ஐபோன்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் தொடர்பாக, 50 பயணிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் குறித்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சிறப்பு சோதனையை மேற்கொண்டனர். அப்போது 6 விமானங்களில் வந்த 25 பயணிகளிடமிருந்து 96 ஐபோன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 25 பயணிகள் நகை வடிவில் கடத்தி வந்த 412 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, 50 பயணிகளை கைது செய்து மத்திய வருவாய் சுங்க அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் இது குறித்து முழு விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 35 லட்சம் ரூபாய் இருக்கும். 96 ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.