Also Watch
Read this
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குணசித்திர நடிகர் சரவணன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணுடன் வாழ்ந்து 40 லட்சம் ரூபாயை வாங்கி விட்டு கம்பி நீட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

குணச்சித்திர நடிகர்
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன். சினிமாவிலும், சின்னத்திரையிலும் குணசித்திர வேடங்களில் அவதரித்து வந்த இவர் தற்போது பெண் ஒருவரை ஏமாற்றிய வழக்கில் சிறைக்கைதியாக மாறியிருக்கிறார். விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் சரவணனுக்கு, பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண் வழக்கறிஞருடன் நட்புறவு ஏற்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வரும் அப்பெண் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சரவணனுடன் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது.

திருமண வாக்குறுதி
திருமணம் செய்து கொள்வதாக சரவணன் நம்பிக்கை கொடுக்கவே கடந்த 2023ஆம் ஆண்டு முதலே அவருடன் அப்பெண் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே அப்பெண்ணை கழட்டிவிட்ட சரவணன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரூ.40 லட்சம் மோசடி
இதனால் வழக்கறிஞர் பெண்ணுக்கும் சரவணனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படவே திருமணம் செய்து கொள்ள முடியாதென மொத்தமாக உதறியிருக்கிறார் அந்த மகா நடிகன். இந்நிலையில், அவருடன் வாழ்ந்த காலக்கட்டத்தில் சிறுக சிறுக 40 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக அப்பெண் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் திருமணம் செய்து கொள்வதாகப் பொய் வாக்குறுதி அளித்து உறவு வைத்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவும் செய்ததோடு, சரவணன் கைதாகினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved