Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் முண்டந்துறை அருகே அமைந்துள்ள பழைய பட்டவராயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ள
நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
தாமிரபரணி ஆற்றில் குறுக்கே கயிறை கட்டி ஆற்றைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நிலையில், இன்று ஏராளமான பக்தர்கள் கயிறு மற்றும் டியூப்களின் உதவியுடன் ஆற்றை பாதுகாப்பாக கடந்து பழைய பட்டவராயர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்.
மேலும் கோவிலுக்கு செல்வதற்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடும்பத்துடன் வந்த பக்தர்கள், தங்களது உடைமைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை டியூப்களில் கட்டி எடுத்துச் சென்றனர்.
பக்தர்கள் பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் வனத்துறையினர் ஆற்றில் கயிறு கட்டி ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், மாலை 5 மணிக்கு மேல் ஆற்றைக் கடந்து கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்காசி மாவட்டம் திருக்குறுங்குடி, ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி, பிரம்மதேசம், விக்கிரமசிங்கபுரம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பழைய பட்டவராயர் கோவில் வளாகத்திற்கு வருகை தந்து, அங்கு குடில்கள் அமைத்து தங்கி வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்வதுடன்,
நேர்த்திக்கடனாக கிடா வெட்டி வழிபாடும் மேற்கொள்ள உள்ளனர். கோவில் வளாகத்திலேயே படையலுக்கான சமையல் பணிகளும் நடைபெற உள்ளன.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை வழிபாடுகளைப் போலவே, பழைய பட்டவராயர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
ஆற்றுப்பகுதியில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றைக் கடக்கும் பக்தர்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன், வனப்பகுதியில் பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கோவில் வளாகத்தில் தங்கி வருவதால், பழைய பட்டவராயர் கோவில் பகுதியில் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved