Also Watch
Read this
By: Manigandan Raja

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கந்தர்வகோட்டை இந்திராநகர், குமரன் காலனி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக, கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
அரசு மதுபான கடை காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கம் நிலையில், இங்கு 24 மணி நேரமும் மதுபானம் கிடைப்பதாகவும், சிலர் வீடுகளில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் அளித்தும் இதுவரை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கூறினால், சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்து விட்டு, ஒன்றும் இல்லை எனவும் அலட்சியமாக சென்று விடுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூறுகின்றனர்.
எனவே சட்ட விரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது புதுக்கோட்டை மாவட்ட போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஆத்திரத்தில் மது விற்பனை செய்யும் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved