Also Watch
Read this
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் வெற்றிக்காக கட்சியினர் களமிறங்கி தீவிரமாக முன்னெடுத்து வரும் பல்வேறு நூதன பிரச்சார வியூகங்கள் தேர்தல் களத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தாராபுரம் தொகுதியில்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம், நாளுக்கு நாள் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்து, எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது. மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்காக, தவெகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் களம் இறங்கி அதிரடி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சைக்கிள் பேரணியில்...
தாராபுரம் தேர்தல் களத்தில் தவெகவினர் கையில் எடுத்த முதல் விழிப்புணர்வு அஸ்திரம் சைக்கிள் பேரணி. தாராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனையில் தொடங்கி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வரை ஒரு மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை அதிரடியாக நடத்தி முடித்தது தவெக தொண்டர்கள் படை.

கூட்டுப் பிரார்த்தனையில்...
பேரணியை தொடர்ந்து, பக்தி பரவசத்திலும் இறங்கியது தவெக. தாராபுரம் விஷ்வ பிராமண மகாஜன சங்கத்தினரை நேரில் சந்தித்த த.வெ.க அமைச்சர்கள், சமுதாய வாக்குகளைக் குறிவைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு சமுதாயமாக தேடி சென்று ஆதரவு திரட்டிய இந்த மைக்ரோ லெவல் பாலிடிக்ஸ், தாராபுரம் களத்தில் மிக முக்கிய கவனத்தை பெற்றது. எல்லீஸ் நினைவு ஆலயம், குளோரி ஏஜ் தேவாலயம் என அடுத்தடுத்து விசிட் அடித்த அமைச்சர்கள் ஆனந்த், அருண் ராஜ், செங்கோட்டையன், பர்வேஸ் ஆகியோர், தவெக நிர்வாகிகளுடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கீ போர்டு வாசித்த அமைச்சர்கள்
பிரச்சாரங்களுக்கு நடுவே, தாராபுரம் எல்லீஸ் தேவாலயத்தில் திடீரென கீ போர்டு வாசித்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஆனந்த். எல்லீஸ் தேவாலயத்திற்குள் ஏற்கனவே மக்கள் நிரம்பி வழிந்ததால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இரு தரப்பினரையும் ஆலயத்திற்கு வெளியே காத்திருக்குமாறு தேவாலய நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதனால் தேவாலய வளாகத்தின் இடதுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தினரும், வலதுபுறம் திமுகவினரும் திரண்டு நின்றனர்.

நலம் தானா...
ஒரே இடத்தில் எதிரெதிரே நின்றிருந்த சூழலில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தவெக நிர்வாகிகள் பரஸ்பரம் நலம் விசாரித்து, நகைச்சுவையாக கேலி கிண்டல் செய்து பேசி சிரித்துக்கொண்டனர்.
எனினும், எங்களைத்தான் முதலில் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று இரு கட்சியினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு தொற்றிக்கொண்டது. தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வெளியே வரத் தொடங்கியதும், போட்டி போட்டுக்கொண்டு இரு தரப்பினரும் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதிரும் தேர்தல் களம்
விழிப்புணர்வு பேரணி, பக்தி, இசை, சமுதாய சந்திப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நேருக்கு நேர் மோதல் என தாராபுரம் இடைத்தேர்தல் களத்தை ஒரு ரவுண்டு கட்டி, அதிரடி அரசியலால் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved