Also Watch
Read this
அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறைப் பணியாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறப் போகிறது. இனி பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு வாரக்கணக்கில் காத்திராமல், உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள UPI செயலி மூலமாகவே சில நிமிடங்களில் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் இந்த புதிய நடைமுறை, சந்தாதாரர்களுக்கு எந்த அளவிற்குப் பலன் தரும் மற்றும் இதன் பின்னணியில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சோதனை முறையில்...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை எளிதாக்கும் 'EPFO 3.0' திட்டத்தின் ஒரு பகுதியாக, யு.பி.ஐ. மூலம் நேரடியாகப் பணம் திரும்பப் பெறும் வசதியை பரிசோதித்து வருகிறது. தற்போது வங்கிகளுடன் இணைக்கப்பட்டு இதற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த சேவை நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிஎஃப் உறுப்பினர்களின் UAN போர்டல் அவர்களின் யு.பி.ஐ. கணக்குகளுடன் நேரடியாக இணைக்கப்படும்.

காத்திருக்க தேவையில்லை
இதுவரை பிஎஃப் தொகையைத் திரும்பப் பெற ஆன்லைன் மூலம் படிவங்களைச் சமர்ப்பித்து, நிறுவனங்களின் ஒப்புதல் மற்றும் அதிகாரிகளின் பரிசீலனைக்குப் பிறகு வங்கிக்கு வர 7 முதல் 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இந்த புதிய யு.பி.ஐ. நடைமுறையின் மூலம், மருத்துவ அவசரம், கல்வி அல்லது திருமணச் செலவு போன்ற அவசரத் தேவைகளுக்குச் சந்தாதாரர்கள் தங்களின் UPI ID மூலமாகவே மிக விரைவாகவும், எளிய வழிமுறைகளிலும் பணத்தை எடுக்க முடியும்.
நிபந்தனைகளுடன்...
இருப்பினும், இந்த சலுகையைப் பயன்படுத்துவதற்குச் சில முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஈ.பி.எஃப்.ஓ வகுத்துள்ளது. இதன்படி, ஒரு சந்தாதாரர் தனது பிஎஃப் கணக்கில் உள்ள தகுதியான மொத்த தொகையில் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை மட்டுமே யு.பி.ஐ. மூலம் உடனடியாக எடுக்க முடியும். மீதமுள்ள 25 சதவீதத் தொகை கட்டாயமாக அவர்களின் கணக்கிலேயே இருக்க வேண்டும். இந்தக் கணக்கில் இருக்கும் தொகைக்கு வழக்கம் போல் வரி விலக்குடன் கூடிய வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

ஆதார், பான்கார்டு...
இந்தச் சேவையை தடையின்றிப் பெற, பயனர்கள் தங்களது யு.ஏ.என். கணக்குடன் ஆதார், பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கே.ஒய்.சி. மூலம் சரியாக இணைத்திருப்பது மிகவும் அவசியம். மேலும், யு.ஏ.என். கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும், யு.பி.ஐ செயலியுடன் இணைக்கப்பட்ட எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய வரலாறு
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாகப் பார்க்கப்படும் இந்த யு.பி.ஐ. இணைப்பு முறை, பல லட்சம் பணியாளர்களின் அவசர நிதித் தேவைகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. வரும் டிசம்பரில் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈ.பி.எஃப்.ஓ புதிய வரலாறு படைக்கும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved