news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 10 வீடுகள், 5 கார்கள், ரூ.620 கோடி
tv

Also Watch

tv

Read this

10 வீடுகள், 5 கார்கள், ரூ.620 கோடி

விஜய் சொத்து மதிப்பு இவ்வளவா?

23

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் த.வெ.க. தலைவர் விஜய்யின் வேட்பு மனு தாக்கல் விவரம் வெளியான நிலையில், விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 620 கோடி ரூபாய் எனவும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 730 கோடி ரூபாய் வருமானம் பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனக்கு சொந்தமாக 10 வீடுகள், கொடைக்கானலில் 2 எஸ்டேட், 5 கார்கள் இருப்பதாக விஜய் குறிப்பிட்டு உள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் விஜய்
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே, தாம் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், 27 பக்கங்கள் கொண்ட வேட்பு மனுவின் விபரங்கள் வெளியாகி உள்ளது.

விஜய் வருமானம் இது தான்...
கடந்த 5 ஆண்டுகளில் விஜய்யின் வருமானம் எவ்வளவு என்ற விபரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2020 - 2021 நிதியாண்டில் 8 கோடி ரூபாயாக இருந்த விஜய்யின் வருமானம், 2021 - 2022 நிதி ஆண்டில் 237 கோடி ரூபாயும், 2022 - 2023 நிதியாண்டில் 198 கோடி ரூபாயும், 2023- 2024 நிதியாண்டில் 105 கோடி ரூபாயும், 2024 - 2025 நிதியாண்டில் 184 கோடி ரூபாயும் வருமானமாக கணக்கு காட்டியிருக்கிறார் விஜய். ஆக மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் 730 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, விஜய்யின் கையில் கையிருப்பு ரொக்கமாக 2 லட்சம் ரூபாயும், அவரது மனைவி கையில் ரொக்கமாக 1 லட்சம் ரூபாயும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சாலிகிராமம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டும் 213 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக விஜய் வைத்திருக்கிறார் என்பதும் வேட்பு மனு மூலம் தெரிய வந்துள்ளது.

விஜய், சங்கீதாவுக்கு...
விஜய்க்கு சொந்தமாக 2 பி.எம்.டபுள்யூ, ஒரு டொயோட்டா லெக்சஸ், ஒரு டொயோட்டா வெல்ஃபையர், ஒரு மாருதி சுசிகி என மொத்தம் 5 கார்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 67 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள TVS எக்செல் சூப்பர் பைக்கும் வைத்திருப்பதாக கூறியிருக்கிறார் விஜய். விஜய்யிடம் 883 கிராம் தங்கமும் அதாவது 110 சவரன் தங்கமும், விஜய் மனைவி சங்கீதாவிடம் 3 ஆயிரத்து 312 கிராம் அதாவது 3 கிலோ தங்கமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர்த்து விஜய்யிடம் 15 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும், அவரது மனைவி சங்கீதாவிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கற்களும் இருக்கிறது. அந்த வகையில், விஜய்யின் மொத்த அசையும் சொத்து மதிப்பு 404 கோடியே 58 கோடி ரூபாயும், அவரது மனைவி பெயரில் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு 15 கோடியே 51 லட்சம் ரூபாயும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அசையா சொத்துக்கள் விவரம்
அடுத்ததாக, கொடைக்கானலில் விஜய்யின் பெயரில் 2 எஸ்டேட் இருக்கும் நிலையில், சென்னையில் போரூர், சாலிகிராமம், நீலாங்கரையிலும் மொத்தமாக 45 ஆயிரத்து 955 சதுர அடி அளவுக்கு விஜய் பெயரில் நிலம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர்த்து, சென்னை பாடி, தியாகராய நகர், சோளிங்கநல்லூர், கொப்பூர் ஆகிய இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட வணிக கட்டிடங்கள் விஜய்க்கு சொந்தமாக இயங்கி வருவதும் தெரிய வந்துள்ளது. அந்த வணிக நிறுவனங்களின் மதிப்பு மட்டும் 82 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டு உள்ளது. அடுத்ததாக, விஜய்க்கு சொந்தமாக சென்னை நீலாங்கரை, சாலி கிராமம், மயிலாப்பூர், பள்ளிப்பட்டு, ஊரூர், சோளிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தமாக 10 வீடுகள் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அந்த வகையில், விஜய்யின் மொத்த அசையா சொத்து மதிப்பு 220 கோடி ரூபாயும், விஜய்யின் மனைவி பெயரில் இருக்கும் அசையா சொத்து மதிப்பு 25 லட்சம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

விஜய் அறக்கட்டளைகள்
தனக்கு ஒரு பைசா கூட கடன் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள விஜய், 3 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வருமான வரி நிலுவை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நடிகர் என்பதை தாண்டி விஜய் வித்யாஷிரம் பள்ளியின் தாளாளராக இருந்து வரும் விஜய், ஒரு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இது தவிர்த்து, வித்யா சாரிட்டபுள் டிரஸ்ட், விஜய் சாரிட்டபுள் டிரஸ்ட், சாய் விஜய் சாரிட்டபுள் டிரஸ்ட் ஆகியவற்றில் டிரஸ்டி ஆக இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். 

விஜய் மனைவிக்கு வருமானம் இல்லை
பத்து, 12ஆம் வகுப்பை மாநில பாடத்திட்டத்தில் பயின்ற விஜய், பி.எஸ்.சி. படிப்பை லயோலா கல்லூரியில் பாதியிலேயே கை விட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு, விஜய் மனைவி சங்கீதாவுக்கு கடைசியாக 2020-2021 நிதியாண்டில் 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வருமானமாக காட்டப்பட்டு உள்ளது. அதற்கு பிறகு விஜய் மனைவி சங்கீதாவுக்கு வருமானம் ஏதும் இல்லை என கூறப்பட்டுள்ளது. விஜய்க்கும், அவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக விஜய் மனைவிக்கு வருமானம் இல்லை என காட்டப்பட்டதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. விஜய் தனது சொந்த சம்பாத்தியத்தில் சுயமாக வாங்கிய சொத்து மதிப்பாக 198 கோடி ரூபாயும், பூர்வீக சொத்து மதிப்பாக 21 கோடி ரூபாயும் காட்டப்பட்டுள்ளது.

குடும்பத்தினருக்கு கடன், முன் பணம்
வேட்பு மனுவில் இருக்கும் முக்கியமான விஷயமே, தனது தாய், தந்தை, மனைவி, மகன், மகளுக்கு கடன் அல்லது முன் பணமாக கொடுத்திருப்பதாக விஜய் குறிப்பிட்டிருப்பது தான். அந்த வகையில், மனைவி சங்கீதாவுக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாயும், அவரது தந்தை சந்திரசேகருக்கு 3 கோடி ரூபாயும், ஷோபா சந்திரசேகருக்கு 87 லட்சம் ரூபாயும் கடன் அல்லது முன் பணமாக கொடுத்திருப்பதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார். மகன் ஜேசன் சஞ்சய்க்கு 8 லட்சம் ரூபாயும், மகள் திவ்யா சாஷாவுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கொடுத்திருப்பதாக கூறியுள்ள விஜய், த.வெ.க.வின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்திற்கு 3 கோடி ரூபாய் கடன் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதிலேயே, கோகிலாம்பாள் அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாயும், தாம் டிரஸ்டியாக இருக்கும் வித்யா சாரிட்டபுள் டிரஸ்டுக்கு 5 கோடி ரூபாயும் வழங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என பிரமாண பத்திரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Related Link
மு.க.ஸ்டாலின், விஜய், சீமான், ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

மு.க.ஸ்டாலின், விஜய், சீமான், ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
1 hr 12 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved