Also Watch
Read this

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்றத்தில் சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இசைஞானி
இசைஞானி இளையராஜா, தற்போது ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்த சூழலில் விக்டோரியா மாகாண அரசு சார்பில் மெல்போர்ன் நகரில் உள்ள “பார்லிமென்ட் ஆப் விக்டோரியா” அவையில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது அவரின் 50 ஆண்டுகால இசை பயணத்தை பாராட்டி விக்டோரியா மாகாண அரசு சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. மாகாண நிதித் துறை அமைச்சர் என்வர் எர்டோகன் சிறப்பு தபால் தலையை வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தகசபை விக்டோரியன் சாப்டர் பொதுச்செயலாளர் மிதுன் ராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மனதார நன்றி
இந்நிகழ்வில், இசைஞானி இளையராஜா பேசியதாவது:
எனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கவுரவித்து சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்ட விக்டோரியா மாகாண அரசின் நிதியமைச்சர் என்வர் எர்டோகன், விக்டோரியா அவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனதார நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து தலைமுறைக்கும்...
என்னுடைய இசைக்கு உயிர் கொடுத்த மக்கள், என்னுடன் இணைந்து பயணித்த கலைஞர்கள், எனது பாடல்களை ரசித்துக் கொண்டிருக்கும் அனைத்து தலைமுறையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இளையராஜா நெகிழ்ச்சி தெரிவித்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved