news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கத்தியின்றி ரத்தமின்றி 4 முனை யுத்தம்
tv

Also Watch

tv

Read this

கத்தியின்றி ரத்தமின்றி 4 முனை யுத்தம்

ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs சீமான் Vs விஜய்

66

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் அரை நூற்றாண்டைக் கடந்தும் தகர்க்க முடியாத சக்திகளாக திராவிட கட்சிகள் திகழ்ந்து வருகின்றன. 1967ல் காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, காலப்போக்கில் தங்கள் எதிர்க்கட்சியாக அதிமுகவை முன்னிறுத்தியது. அதன்பிறகு திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி அமர்ந்த நிலையில் இவர்களுக்கு மாற்று என சீமான் தனித்து நின்று மீசையை முறுக்க தற்போது இவர்கள் அனைவருக்குமே நான்தான் உண்மையான மாற்று எனக்கூறி தவெக தலைவர் விஜய் களத்திற்கு வந்துள்ளார். இத்தகைய சூழலில், 2026 தேர்தலில் என்ன நிகழும் என்பதை விரிவாக அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

* 1967 சட்டமன்ற தேர்தலில் காங். கோட்டையைத் தகர்த்தெறிந்த தி.மு.க
* 1977 சட்டமன்ற தேர்தல் முதல் பல வரலாற்று வெற்றிகளை குவித்த அ.தி.மு.க
* 2021ல் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய அ.தி.மு.க

தமிழ்நாட்டில், 1967ல் எழுச்சி பெற்ற திராவிடப்பேரலையால் அன்று காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்தெறிந்தது தி.மு.க. இன்றுவரை ஒரு வலுவான சக்தியாக அடையாளப்படுத்திக் கொண்டு, தற்போதும் ஆட்சிக் கட்டிலில் வலுவாக உள்ளது. 1967ல் கோட்டையிலிருந்து அகற்றப்பட்ட காங்கிரஸ், தற்போது வரை தனித்து தலையெடுக்க முடியாமல், திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து இன்று வரை தேர்தலை சந்திக்கும் நிலையில் உள்ளது.

* விஜய்யின் வருகையால் முற்றிலுமாக மாறியுள்ள தமிழக அரசியல் களம்
* தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் நான்கு முனைப் போட்டி
* 1949ஆம் ஆண்டு கட்சி தொடங்கி 1967ல் ஆட்சி கட்டிலில் அமர்ந்த தி.மு.க


மறுபுறம், 1977ல் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அ.தி.மு.க, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் பல வரலாற்று வெற்றிகளைக் குவித்தது. எம்ஜிஆர் காலத்தில், தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று முறையும், ஜெயலலிதா காலத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறையும் வெற்றி பெற்று சாதனை படைத்த கட்சியாக திகழ்கிறது. அதிமுக. 2021ல் ஆட்சியை இழந்தாலும், பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது.

* 1972ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர்
* விஜய் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்வாரா?
* விஜய் கட்சியின் வாக்குகள் மூலம் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தெரியும்?


இந்த நிலையில் தற்போது அரசியல் களத்திற்கு நடிகர் விஜய்யின் வருகை காரணமாக தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் 8 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்த நாம் தமிழர் கட்சி ஆகியவை தேர்தலில் களம் கண்ட நிலையில், தற்போது இளம் முதல் முறை வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாக கருதப்படும் விஜய்யின் தவெகவும் களம் காண்பதால் 4 முனைப் போட்டியாக மாறியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் அரசியல் பிரவேசம், இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. 2021ல் சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் காட்டிய எழுச்சிக்கு ஈடாக, விஜய் தனது ரசிகர் பட்டாளத்தை வாக்கு வங்கியாக மாற்றுவாரா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

* விஜயின் வருகை காரணமாக சீமான் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு?
* தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழல் ஏற்படும்?
* திமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் உருவாகியிருக்கும் அதிமுக கூட்டணி


இந்த தருணத்தில், தமிழக அரசியல் கட்சிகள் முதல்முறை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை பார்க்க வேண்டியுள்ளது. 1949ஆம் ஆண்டு அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுக 1967ஆம் ஆண்டு தேர்தலில் தான் சுமார் 40 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியமைக்க முடிந்தது. 1972ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் 1977ஆம் ஆண்டு தேர்தலில் சுமார் 30 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சிக் கடலில் அமர்ந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால், எம்ஜிஆர் 1952ஆம் ஆண்டிலிருந்து திமுகவின் ஒரு முக்கிய தலைவர்களில் ஒருவராக அரசியலில் பயணித்திருந்தார் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, விஜய் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் முதல் தேர்தலிலேயே பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்வாரா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

கடந்த 2021 தேர்தல் அடிப்படையில் பார்க்கும்போது பல தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசமே வெற்றியாளர்களை தீர்மானித்த நிலை இருந்தது. தற்போது 2026 தேர்தலில் விஜய்யின் கட்சி பிரிக்கப்போகும் வாக்குகள், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் கிங் மேக்கராக மாற்றக்கூடும் என்ற கணிப்புகளையும் வெளிப்படுத்துகின்றனர் சில அரசியல் நோக்கர்கள்.

* விஜய் பெறப்போகும் கணிசமான வாக்குகளால் எந்த கட்சிக்கு பெரும் சேதம்?
* நலத்திட்டங்கள் பலவற்றை அறிவித்து ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கும் தி.மு.க
* 2021ல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றத் துடிக்கும் அ.தி.மு.க


கடந்த தேர்தல்களில் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை ஆதரிக்காதவர்களின் வாக்குகளை, அதாவது மாற்றத்தை எதிர்நோக்கும் வாக்காளர்களின் ஓட்டுகளை இதுவரை அறுவடை செய்து வந்த சீமானுக்கு விஜய்யின் வருகை பாதகமாக மாறக்கூடும் என்ற ஒரு கணிப்பும் நிலவுகிறது. 2010ல் மீண்டும் உயிர்பெற்ற நாதக, கடந்த 16 ஆண்டுகளில் சீராக தனது வாக்கு வங்கியை அதிகரித்து வந்திருப்பது இந்த தேர்தலிலும் தொடருமா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

திமுக கூட்டணி காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக, மமக மற்றும் சிறுகட்சிகள் என வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தொகுதி கேட்பது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல்கள் ஆங்காங்கே எழுந்தாலும், கொள்கைக் கூட்டணியாக தற்போது வரை எந்த சேதாரமும் இன்றி வலிமை நிரூபிக்கப்பட்ட கூட்டணியாக தொடரும் நிலையில், தற்போது தேமுதிகவும் அதில் இணைந்திருப்பது திமுகவுக்கு சாதகமான அம்சமாக கருதப்படுகிது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஜி.கே.வாசனின் தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் உருவாக்கப்பட்டு சபாஷ் சரியான போட்டி என்ற நிலையை தமிழக தேர்தல் களத்தில் உருவாக்கியிருக்கிறது. இருப்பினும், விஜய் பெறப்போகும் வாக்குகள் யாருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* தனித்து போட்டி என்பதில் கொள்கை மாறாமல் பயணிக்கும் சீமானின் நாதக
* மாற்றத்தை மட்டுமே முன்வைத்து பேசி வரும் தவெக தலைவர் விஜய்
* ரத்தமில்லா யுத்தத்திற்குத் தயாராகி வரும் 2026 தமிழக தேர்தல் களம்


ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் இயல்பான மனநிலையை, அரசின் மகளிர் நலத் திட்டங்கள் மூலம் முறியடித்து கோட்டையைக் காக்கத் துடிக்கும் தி.மு.க, இழந்த செல்வாக்கை மீட்கத் துடிக்கும் அ.தி.மு.க, ஒவ்வொரு தேர்தலுக்கும் தனித்து போட்டி என்ற கொள்கையை மாற்றாமல் பயணிக்கும் நாதக, மாற்றத்தை முன்வைக்கும் விஜய் என்று, 2026 தமிழக தேர்தல் களம் ஒரு ரத்தமில்லா யுத்தத்திற்குத் தயாராகிவிட்டது.

Related Link
திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 7 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved