Also Watch
Read this
கோயம்புத்தூர் அருகே போதைப்பொருள் கடத்தல் காரின் மீது படுத்தபடியே 50 கிலோ மீட்டர் பயணித்து, தீரத்துடன் போராடி போலீஸ் ஏட்டு ஒருவர் அந்த கும்பலை பிடித்து உள்ளார். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் சேசிங் காட்சிகளுடன் நடந்த பரபரப்பு வேட்டையை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

வாகன தணிக்கையின் போது...
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் தலைமை காவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் விளாங்குறிச்சியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை மடக்கி சோதனையிட்டனர். காரின் டிக்கியில் மூட்டை மூட்டையாக ஏதோ பொருட்கள் இருந்ததை கவனித்த காவலர்கள், அவற்றை பரிசோதிக்க முயன்றனர். அப்போது காரை ஓட்டுநர் ஸ்டார்ட் செய்ய முயன்றதை கண்ட போலீஸ் ஏட்டு வேல்முருகன், காரின் மீது பாய்ந்து ஏறினார்.

காரின் மேலே...
தலைமை காவலர், காரின் கூரையில் தொற்றிக் கொண்டிருந்த நிலையிலும் அந்த கும்பல் காரை நிறுத்தவில்லை. ஹாலிவுட் சினிமா காட்சிகளை போல, காரின் உச்சியில் போலீஸ் படுத்துகிடக்க, நெடுஞ்சாலையில் பறந்தது அந்த கடத்தல் கார். காரை மடக்க கணியூர் சுங்கச்சாவடியில் போலீசார் தடைகளை வைத்த போது, அந்த கார் தடைகளை தாண்டி பறந்தது.

அந்த காரை எப்படியும் மடக்கி போலீஸ் ஏட்டுவை பத்திரமாக மீட்க எண்ணிய காவல்துறையினரின், கணியூர் போலீஸ் ரோந்து வாகனம், ஆம்புலன்ஸ், எல்.ஜி மருத்துவமனை ஆம்புலன்ஸ், பாலா ஆர்த்தோ மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் 'சினேகம்' ஆம்புலன்ஸ் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த காரை விடாமல் துரத்தினர்.

சினிமாவைப் போல்...
கார் அவிநாசி நோக்கி சென்றதை அடுத்து, அங்குள்ள காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவிநாசி காவலர்கள் எதிர்திசையில் அந்த கடத்தல் காரை குறி வைத்து விரைந்துசெல்ல, காருக்கு பின்னால் பெரும் படையுடன் கோவிலம்பாளையம் போலீஸ் விரைந்துசெல்ல, சினிமா காட்சிகளை தோற்கடிக்கும் விரட்டல் அங்கு நடைபெற்றது.

300 கிலோ...
இறுதியில், அவிநாசி அன்னபூர்ணா ஓட்டல் அருகே , ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தன.

காரில் இருந்து இருவர் தப்பி ஓடி, ஓட்டுநர் பிடிபட்டார். தப்பிய இருவரையும் மடக்கி பிடித்து காரை சோதனை இட்ட போது, அதில் 300 கிலோ குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடமையை நெஞ்சில் சுமந்து உயிரை துச்சமென நினைத்து கடத்தல்காரர்களை பிடிக்க மூலக் காரணமாக இருந்த வீர தீரமிக்க வேல்முருகனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved