Also Watch
Read this
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையால் பலவீனமடைந்து வருவதாக கூறப்படும் அதிமுக, நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் அடைந்துள்ள படுதோல்வி அக்கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. தனது பாரம்பரிய கோட்டைகளான மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக தூக்கி எறியப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன?
ஜெயலலிதா காலத்து செயல்வேகமும், அதிரடிகளும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில், இன்று முற்றிலுமாக மறைந்துவிட்டன என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே சாட்சியாக அமைந்துள்ளன.

மதுராந்தகம் தொகுதியில்...
மதுராந்தகத்தில், 7 ஆயிரம் வாக்குகள், தாராபுரத்தில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு சென்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர், இபிஎஸ் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர்.
இந்த திடீர் திருப்பத்தால் 2 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டதும், இரட்டை இலையின் கோட்டைகளை, இடைத்தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என்ற அதீத நம்பிக்கையுடன் அதிமுக களமிறங்கியது. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில், பலமுறை வெற்றிகளை குவித்த அதே கோட்டைகளிலேயே அதிமுக படுதோல்வியை சந்தித்திருப்பது அக்கட்சித் தலைமையின் தலையில் பேரிடியை இறக்கியிருக்கிறது.

மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் களத்தை ஆராய்ந்தால், அங்கு கூட்டணி கணக்குகளும், கட்சிகளின் தொகுதி பங்கீடும் அதிமுகவிற்கு பெரும் தடையாக மாறியுள்ளன. வன்னியர் சமூகத்தின் கணிசமான வாக்குகள் நிறைந்த இந்த தொகுதியில், கடந்த கால தேர்தல்களில் பாமகவின் ஆதரவு தான் அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளது.
ஆனால், இந்தமுறை, கூட்டணியில் தொடரும் போதும், வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே யாருக்கும் ஆதரவில்லை என்று முடிவெடுத்து அதிமுகவுக்கு ஷாக் கொடுத்தது பாமக.

பாமகவின் வாக்கு வங்கி
இதன் காரணமாக, பாமகவின் வாக்கு வங்கி அப்படியே சிதறி, தவெகவின் பக்கம் பாய்ந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். மேலும், அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் கணிதா சம்பத் மதுராந்தகத்தை சேர்ந்தவர் அல்ல, அவர் வெளியூரை சேர்ந்தவர் என்ற விமர்சனமும் எதிர்மறையாக அமைந்தது.
அதோடு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகத்திற்கு எதிர்பார்த்த அளவிலான தேர்தல் பொறுப்புகள் வழங்கப்படாததும், சீனியர் நிர்வாகிகளின் களப்பணி வேகம் மந்தமாக இருந்ததும் அதிமுகவின் தேர்தல் இயந்திரத்தை முற்றிலுமாக முடக்கியதாக சொல்லப்படுகிறது.

தாராபுரத்தில்...
இது ஒருபுறமென்றால், கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் தாராபுரத்தில், பாரம்பரியமான வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்கிய அதிமுக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தல் பணிகளை முன்னின்று நடத்த வேண்டிய மாவட்டச் செயலாளர் மடத்துக்குளம் மகேந்திரன் கடைசி நேரத்தில் கையை விட்டுப்போனது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கடந்த 5 ஆண்டுகளில் தாராபுரம் பகுதியில் விதை பண்ணை மேம்பாடு செய்யப்படாதது, நூற்பாலை தொழிலை நவீனமாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறியது போன்ற காரணங்களால் அப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட முழுமையாக நிறைவேற்றப்படாததும் மக்களை மாற்றத்தை நோக்கி திருப்பியது. ஆளுங்கட்சியின் வளர்ச்சி திட்டங்களை நம்பி செல்வதே சிறந்தது என்று வாக்காளர்கள் முடிவு செய்ததன் விளைவு, பாரம்பரிய அதிமுகவின் கோட்டை, தவெக வசமாகியிருக்கிறது.

முந்தைய கால இடைத்தேர்தல்களை போல, இந்த முறை ஓட்டுக்கு நோட்டுகள் பாய்வது பெரியளவில் நடைபெறவில்லை என்றும், இதனால் வாக்காளர்கள் எந்தவித வெளிப்புற அழுத்தமும் இன்றி விரும்பிய வேட்பாளருக்கு சுதந்திரமாக வாக்களித்ததாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதிமுக வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? என்பன குறித்த வலுவான வாக்குறுதிகளையோ, எதிர்கால முன்னெடுப்புகளையோ அக்கட்சியால் வாக்காளர்களிடம் வெற்றிகரமாக கொண்டு சேர்க்க முடியவில்லை.
மறுபுறம், ஆளுங்கட்சியான தவெகவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் தொகுதிக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளும், வளர்ச்சி பணிகளும் விரைவாக வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியது. இதுவே, பாரம்பரியமாக அதிமுகவை ஆதரித்து வந்த 2 பெரிய கோட்டைகளின் தலையெழுத்தையும், ஒரே இரவில் மக்கள் மாற்றி எழுத முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எதிர்காலத்திற்கு எச்சரிக்கை
தற்போது, அதிமுகவிடம் மொத்தமாக 41 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ள இந்த கடும் அதிர்ச்சி காரணமாக, கட்சியில் இருக்கும் மேலும் சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் எப்போது வேண்டுமானாலும் தவெக பக்கம் தாவ வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர். எதிர்க்கட்சியாக கூட பலம் காட்ட முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறிவரும் இந்த சூழலில், இடைத்தேர்தல் தோல்வி, அதிமுகவின் எதிர்காலத்திற்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved