Also Watch
Read this
தமிழ்நாடு காவல்துறையில் ஒரே நாளில் விழுந்த மிகப்பெரிய இடி இது. கூடுதல் டிஜிபி ஏ.அருண் ஐபிஎஸ் மற்றும் ஐ.ஜி. என்.கண்ணன் ஐபிஎஸ் ஆகிய இரண்டு டாப்-லெவல் ஆபீசர்களை தூக்கியடித்து கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் உட்கார வைத்துள்ளது தமிழ்நாடு அரசு. சஸ்பெண்ட் செய்யப்படாவிட்டாலும், அதிகாரமிக்க பதவிகளில் இருந்த இவர்களை இப்படி 'டம்மி' ஆக்கியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகளின் இடமாற்றத்திற்கான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

தமிழ்நாட்டில்...
தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டிஜிபி ரேங்கில் உள்ள மிக முக்கிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி. முந்தைய திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக அதிகாரம் செலுத்தியவர். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற கதையாக, காவல்துறையில் மிக முக்கிய பதவியாக கருதப்படும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக, தவெக ஆட்சியிலும் அவர் நியமனம் செய்யப்பட்டது பலரின் புருவத்தை உயர்த்தியது.

அதிகாரம் படைத்தவர்
தவெக அரசிலும் அதிகாரம் படைத்தவர் என்ற பெருமைக்கு ஆளான அந்த அதிகாரி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்ற ஐம்பதே நாளில் செங்கல்பட்டு மாவட்டம் ஊமணஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகடாமியின் இயக்குநராக தூக்கி அடிக்கப்பட்டார். உச்சாணிக் கொம்பில் இருந்து கீழிறக்கப்பட்ட மிக மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு, இன்று எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டு அரசியல் மைதானத்தில் அடிக்கடி பந்தாடப்படும் கூடுதல் டி.ஜி.பி. அருண் ஐ.பி.எஸ். தான் அவர்.

கட்டாயக் காத்திருப்பு
தமிழக காவல்துறையின் மிக முக்கிய உயர் அதிகாரியாக வலம்வந்த அருணையும், கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய மற்றுமொரு ஐபிஎஸ் அதிகாரியான என்.கண்ணனையும் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
தமிழக காவல்துறையில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வரும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கில், இந்த இரு உயரதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதமே ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் இந்த பாலியல் அத்துமீறல் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆதிதிராவிடர் நலப் பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், காவல் துறையிடம் ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாகப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

2 ஆண்டுகளைக் கடந்து...
ரஞ்சன்குமார் புகாரளித்த அந்த காலகட்டத்தில், கூடுதல் டிஜிபி அருண் ஐ.பி.எஸ்., சென்னை மாநகர காவல் ஆணையராகவும், ஐ.ஜி., என்.கண்ணன் ஐ.பி.எஸ்., சென்னை தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையராகவும் பணியாற்றி வந்தனர்.
புகார் அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அன்றைய சென்னை மாநகர காவல்துறை ஜெம் வீரமணி விவகாரத்தில் எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்கு எதிரான வழக்கை மூடி மறைக்க முயன்றதாக புகார்கள் எழுந்தன.

காவலர்களுக்கு சம்மன்
ஜெம் வீரமணி வழக்கை ஆரம்பத்தில் கையாண்டு, முறையான விசாரணை இன்றி வழக்கை இழுத்து மூட பரிந்துரைத்த அப்போதைய விபச்சார தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் யாஸ்மின், ஆய்வாளர்கள் மகேஷ்குமார் மற்றும் ராஜலட்சுமிக்கு மத்திய குற்றப்பிரிவு ஏற்கனவே சம்மன் அனுப்பி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கட்டாய காத்திருப்பு பட்டியலில்...
இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் நடுநிலையான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த கூடுதல் டிஜிபி ஏ.அருண் ஐபிஎஸ், கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த என்.கண்ணன் ஐபிஎஸ் மற்றும் உதவி ஆணையாளர் யாஸ்மினுக்கு எந்த பொறுப்பும் கொடுக்காமல் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி டம்மியாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

துறை ரீதியாக...
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் எந்தவொரு அரசியல் அல்லது அதிகாரத் தலையீடும் இருக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த இரு மூத்த போலீஸ் அதிகாரிகளும் அதிரடியாக தூக்கி அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையின் அடிப்படையில் இவர்கள் மீது அடுத்தகட்ட துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை மணி
போக்சோ போன்ற மிகத்தீவிரமான வழக்குகளில் அலட்சியம் காட்டும் காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு சும்மா விடாது என்ற எச்சரிக்கை மணியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved