Also Watch
Read this
'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பைக்கான கார் பந்தய போட்டியில் அஜித்குமாரின் TEAM VIRAGE அணி 3வது இடம் பிடித்தது. முதலமைச்சர் விஜய் பச்சை கொடியசைத்து தொடங்கிவைத்த நிலையில் அஜித்குமாரின் அணி 3வது இடம் பிடித்து அசத்தி உள்ளது.

Michelin Le Mans Cup
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தயப் பாதையில் நடைபெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை (Michelin Le Mans Cup) கார் பந்தயத் தொடரின் 5வது சுற்றில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். இந்த பந்தயத்தை முதல்வர் விஜய் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

முதல்வர் விஜய்க்கு அழைப்பு
நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உலகளாவிய சுற்றுப் பயணம், கார் பந்தயங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற மிச்செலின் லீ மேன்ஸ் கார் பந்தயத் தொடரில் அஜித் அணி களம் இறங்கியது, மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
லண்டனில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கக் கோரி, தனது சக நடிகரான தமிழக முதல்வர் விஜய்க்கு அஜித்குமார் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக லண்டன் சென்றார்.

அஜித்தைக் கட்டியணைத்து முத்தமிட்டு...
லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு முதல்வர் விஜய் நேரில் வந்தபோது, அவரை நோக்கி நடிகர் அஜித்குமார் நடந்து வந்தார். அப்போது ஓடிச் சென்று அஜித்தைக் கட்டியணைத்து முத்தமிட்டு முதல்வர் விஜய் தனது அன்பைப் பகிர்ந்துகொண்டார். அஜித்தும் அவரை ஆரத் தழுவி உற்சாகமாக வரவேற்றார்.

பந்தயக் காரின் மீது அமர்ந்து...
பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்தின் பந்தயக் காரின் மீது அமர்ந்து முதல்வர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பச்சைக்கொடி அசைத்து...
44 பந்தயக் கார்கள் பங்கேற்ற இந்த சர்வதேச கார் பந்தயத் தொடரைத் தமிழக முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.

திரிஷா, ராதிகா சரத்குமார்...
இந்நிகழ்வில் முதல்வர் விஜயுடன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

பந்தயத்தைக் காணவும், களம் காணும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் நடிகைகள் திரிஷா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு நேரில் வருகை தந்திருந்தனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved