news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பூஜ்ய கட்டண விதிக்கு முற்றுப்புள்ளியா? இனி UPIல் பணம் அனுப்ப கட்டணமா?
tv

Also Watch

பூஜ்ய கட்டண விதிக்கு முற்றுப்புள்ளியா? இனி UPIல் பணம் அனுப்ப கட்டணமா?

சாதாரண மக்களுக்கும் பாதிப்பா?

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நமது அன்றாட வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட  UPI பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் கட்டணம் வரப்போகிறதா? மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு முக்கிய சட்டத் திருத்தம், நாடு முழுவதும் இந்தக் கேள்வியை பேசு பொருளாகியுள்ளது. வங்கிகளையும், கட்டணச் சேவை வழங்குநர்களையும் கட்டிப் போட்டிருந்த "பூஜ்ஜிய வணிகத் தள்ளுபடி வீதம்" எனப்படும் Zero MDR என்ற சட்டப்பூர்வ தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் சாதாரண மக்களின் செலவு அதிகரிக்குமா? அல்லது இந்தியாவின் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பு மேலும் வலுப்பெறுமா?

கட்டணம் விதிக்கும் அதிகாரம்
மக்களவையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி, எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா, 2026' நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், Payment and Settlement Systems Act, 2007இல் உள்ள பிரிவு 10A திருத்தப்பட்டு உள்ளது. இதுவரை இந்தப் பிரிவுதான் RuPay மற்றும் BHIM-UPI போன்ற டிஜிட்டல் கட்டணங்களுக்கு Merchant Discount Rate எனப்படும் MDR கட்டணம் வசூலிப்பதை சட்டரீதியாகத் தடுத்து வந்தது. தற்போது அந்த சட்டத் தடை நீக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கியமாக இந்த மசோதா உடனடியாக எந்தக் கட்டணத்தையும் விதிக்கவில்லை. மாறாக, தேவையெனில் எதிர்காலத்தில் MDR அல்லது பிற கட்டண முறைகளை அறிவிக்கும் அதிகாரத்தை மட்டுமே மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.20,000 கோடி
இந்த மாற்றத்திற்குப் பின்னால் மிகப்பெரிய பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 314 லட்சம் கோடி ரூபாய். உலகின் மிகப்பெரிய நிகழ்நேர டிஜிட்டல் கட்டண அமைப்பாக வளர்ந்துள்ள UPIயை பாதுகாப்பாகவும், தடையின்றியும் இயக்க இணையப் பாதுகாப்பு, கிளவுட் சேவைகள், மோசடி தடுப்பு அமைப்புகள், தரவு மையங்கள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக வங்கிகளும், ஃபின்டெக் நிறுவனங்களும் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடுவதாகத் துறை மதிப்பிடுகிறது.

உள்கட்டமைப்பு பராமரிப்பு செலவு
ஆனால், இந்தச் செலவின் ஒரு பகுதியை மட்டுமே மத்திய அரசு ஏற்று வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்த உள்கட்டமைப்புச் செலவில் சுமார் 11 சதவீதம், அதாவது 8,730 கோடி ரூபாய் மட்டுமே அரசு மானியமாக வழங்கி உள்ளது. மீதமுள்ள பெரும் செலவை வங்கிகளும், ஃபின்டெக் நிறுவனங்களும் ஏற்று வந்ததால், Zero MDR முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவும், இவ்வளவு பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பராமரிக்க வேண்டிய செலவை இறுதியில் யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று சமீபத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

நிதியமைச்சர் விளக்கம்
இந்த சட்டத் திருத்தம் வெளியானதும், இனி UPI பயன்படுத்தினாலே கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வருமா? என்ற கேள்வி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஒருவர் மற்றொரு நபருக்கு செய்யும் Person-to-Person அல்லது P2P UPI பணப் பரிமாற்றங்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என்றும், அவை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது பரிசீலனையில் இருப்பது வணிகப் பரிவர்த்தனை தொடர்பான MDR நடைமுறை மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்டிஆர் வசூல், ஆலோசனை
இதற்கிடையே, 2 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வணிக பரிவர்த்தனைக்கு 0.25 முதல் 0.40 சதவீதம் வரை MDR விதிக்கலாம் என்ற பரிந்துரைகள் தொழில்துறை வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. தொழில் துறை மதிப்பீடுகளின்படி, வணிகர்களுக்கான UPI பரிவர்த்தனைகளில் வெறும் 4 சதவீதம் மட்டுமே ரூ.2 ஆயிரத்தைத் தாண்டுகின்றன. ஆனால், அந்த 4 சதவீதப் பரிவர்த்தனைகளே மொத்த பரிவர்த்தனை மதிப்பில் சுமார் 65 சதவீதத்தை வகிக்கின்றன. எனவே, அன்றாடச் சிறிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை பாதிக்காமல், அதிக மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகளில் மட்டும் MDR வசூலிக்கும் மாதிரி குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.


அரசுக்கு வழங்கும் சட்ட மாற்றம்
ஆனால், ஒருவேளை எதிர்காலத்தில் வணிகர்களுக்கு MDR விதிக்கப்பட்டு, அந்தச் செலவை அவர்கள் நுகர்வோரிடம் மறைமுகமாக மாற்றினால், அதன் தாக்கம் UPI பயன்பாட்டிலும் எதிரொலிக்கலாம். LocalCircles அமைப்பு நடத்திய ஆய்வின்படி, ரூ.3 ஆயிரத்துக்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட்டால், வெறும் 12 சதவீதம் பேர் மட்டுமே UPIயைத் தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்தச் சட்டத் திருத்தத்தை UPIக்கு உடனடியாகக் கட்டணம் விதிக்கும் முடிவாகப் பார்க்க முடியாது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த Zero MDR என்ற சட்டத் தடையை நீக்கி, எதிர்காலத்தில் தேவைக்கேற்ப கட்டணக் கொள்கையை வகுக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியிருக்கும் சட்ட மாற்றமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பழனி நில மோசடி, சிறையில் வழக்கறிஞர் உயிரிழப்பு

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved