Also Watch
Read this
கோவையில், பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட ஒற்றை தொகுதியும் தனக்குதான் வேண்டும் எனவும் அப்படி ஒதுக்காவிட்டால் தேர்தலிலேயே நிற்கமாட்டேன் எனவும் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை முரண்டு பிடித்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது பெயர் இல்லாமலேயே பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தன் இலைக்கு மட்டும் பாயாசம் வேண்டாம், பக்கத்து இலைக்கும் பாயாசம் வேண்டும் என்பது போல் தனது ஆதரவாளர்களுக்கும் விரும்பிய தொகுதியை கேட்டு அண்ணாமலை விதண்டாவாதம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள பட்டியல் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டார தரப்பில் கூறப்படுகிறது.

வருகிறது தேர்தல்
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள எண்ணி 20 நாட்கள்கூட இல்லை. அதேபோல், வேட்புமனு தாக்கல் முடிவடையவும் இன்னும் 2 நாட்கள்தான் உள்ளன. இதனால், மற்ற கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, பிரச்சார வாகன மேற்கூரைகளில் பறந்து வெற்றிகளை வாரி குவிக்கும் வேலையில் இறங்கி உள்ளனர். ஆனால், பாஜகவோ தமிழகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமலேயே இருந்தது. இந்த இழுவலுக்கு ஒரே காரணம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தான் என்றும் அவருடைய முரண்டு பிடித்தலும்தான் காரணம் என்றும் தகவல் வெளியானது.

”ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு”
இந்த முறை கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு ஆகிய 4 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நிற்க அண்ணாமலை நினைத்திருந்ததாகவும், அதிலும் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், தான் அதிக வாக்குகள் பெற்றிருந்த கோவை வடக்கிற்கு பிறகு தான் மற்ற தொகுதிகளை கன்சிடர் செய்யவே முடிவு செய்திருந்தாராம். இதனிடையே, பாஜகவுக்கு கோவையில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு தொகுதியும் அண்ணாமலையின் விருப்பத் தொகுதியான கோவை வடக்கு தான். ”ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” தொகுதியான வடக்கை தனக்கு ஒதுக்குமாறு அண்ணாமலை தலைமையிடம் டிமாண்ட் செய்ய, பாஜக தேசிய மகளிர் அணி தலைவியான வானதி சீனிவாசனும் அந்த தொகுதியை கைப்பற்ற தான் துடித்துக் கொண்டிருந்தார். அதனால், அண்ணாமலை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தலைமை கேட்டதாக தெரிகிறது. ஆனால் ”மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்பதுபோல் நின்றால் வடக்கு இல்லாவிட்டால் இந்த தேர்தலில் களமிறங்கப்போவதே இல்லை என அடம்பிடித்தாராம்.

மயிலாப்பூர் யாருக்கு?
வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஏற்கனவே கடிதம் அளித்திருந்திருந்த அண்ணாமலையை நிற்க வைத்தே ஆக வேண்டும் என அறிவுறுத்தியதே நாம்தான், அப்படி இருக்கும்போது இப்படி பிடிவாதம் செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது? என்ற கோபம் ஒருபக்கம் தேசிய தலைமைக்கு இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளும் நேரமா இது? என அமைதி காத்து வந்தார்களாம். இதுஒருபுறமிருக்க, கோவை வடக்கில் தான் தனக்கு கிரீன் சிக்னல் காட்டவில்லை, தனது ஆதரவாளர்களுக்காவது நினைத்த தொகுதியை கொடுக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நின்றாராம். அதாவது, மயிலாப்பூர் தொகுதியை தனது ஆதரவாளரான எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஒதுக்க வேண்டும் என அண்ணாமலை அடம்பிடிக்க, அந்த தொகுதியை ஏற்கனவே கேட்டு காய் நகர்த்திய தமிழிசைக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தர்மசங்கடத்திற்கு தலைமை ஆளானார்களாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தென்சென்னையில் போட்டியிட விரும்பினார் எஸ்.ஜி.சூர்யா. ஆனால், கடைசிநேரத்தில் தென் சென்னை தொகுதி தமிழிசை கைக்கு சென்றது. அதனால், தற்போதும் விட்டுக்கொடுக்க முடியாது எனக்கூறினாராம் அண்ணாமலை.

கட்சியில் இருந்து விலக முடிவு?
அதேபோல், தனது மற்றொரு ஆதரவாளரான A.P.முருகானந்தத்திற்கு திருப்பூர் தெற்கு தொகுதியை ஒதுக்கவும் துண்டு போட்டு வைத்தாராம். ஆனால் திருப்பூர் தெற்கு தொகுதியில் ஒரு VIP-யின் மகனை நிற்க வைக்க நயினார் முயற்சி செய்து வருவதாக ஒரு தகவல் லீக் ஆனது. இதனிடையே, தளி தொகுதியை அமர்பிரசாத் ரெட்டிக்கு ஒதுக்குமாறு கேட்ட அண்ணாமலை, கிணத்துக்கடவு தொகுதியையும் தனது ஆதரவாளர் வசந்தராஜனுக்கு பெற்றுத்தரவே விருப்பமாக இருந்தாராம். ஆனால், கிணத்துக்கடவு தொகுதியை அதிமுகவிடம் கேட்டு பெறாதது அண்ணாமலைக்கு வருத்தம் தானாம். மொத்தத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்த பாடுபட்ட தனக்கும் கேட்ட தொகுதி இல்லை, தனது ஆதரவாளர்களுக்கும் கேட்ட தொகுதிகள் இல்லை என்றால் ஒரு முன்னாள் மாநில தலைவராக தனக்கு என்னதான் முக்கியத்துவம் உள்ளது? என்ற அதிருப்தியில் உள்ள அண்ணாமலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4 ஆம் தேதி கட்சியில் இருந்தே விலகுவேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறினாராம்.

இது தான் கூட்டணி தர்மம்
வாய்ஸ் இல்லாத இடத்தில் தொடர்ந்து நீடிப்பது தனது அரசியல் எதிர்காலத்திற்கு சரியாக இருக்குமா? என தனக்கு நெருக்கமானவர்களிடம் அண்ணாமலை ஆலோசனை செய்ததாகவும் அதேநேரம் தற்போது விலகுவது சரியாக இருக்காது, தேர்தல் பணிகளை செய்துவிட்டு விலகுவதே அரசியல் அறம் எனவும் கூறினாராம். இதுஒருபுறமிருக்க, அண்ணாமலையின் விருப்ப ஆப்ஷனில் இருந்து அதிமுகவிற்கு கைநழுவிச் சென்ற கவுண்டம்பாளையம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார் சிட்டிங் எம்எல்ஏ அருண்குமார். அவர், அண்ணாமலயை சந்தித்து ஆதரவு கோரிய வீடியோ வெளியானது. அதில், 23 ஆம் தேதி காலையில் தனது வாக்கை செலுத்திவிட்டு பூத் லெவல் ஏஜெண்டாக பணியாற்றுவேன் எனவும் அண்ணனுக்காக முழு வேலையை பார்த்துவிட்டு தான் வெளியே வருவேன் எனவும் கூறியுள்ள அண்ணாமலை தன்னிடம் ஆதரவு கேட்டு வரலாமா? எனவும் கூறி உள்ளார். இவரது இந்த உரையாடலை கேட்ட பலரும் உள்ளுக்குள் ஆயிரம் வருத்தம் இருந்தாலும் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுகிறார்போல என பேசி வந்தனர்.

பாஜகவுக்கு பின்னடைவு
இதற்கு மத்தியில்தான், தற்போது பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அண்ணாமலையின் பெயரும் இடம்பெறவில்லை, அவரது ஆதரவாளர்களின் பெயரும் இடம்பெறவில்லை. இது அண்ணாமலைக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நிச்சயம் பெரிய ஏமாற்றத்தையே அளித்திருப்பதாக கூறும் அரசியல் வட்டாரம் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கூறி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved