உலகிலேயே முதன் முறையாக, டிரைவர் இல்லாமல் ஓடும் ஆட்டோ, இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. மக்கள் நெருக்கம் உள்ள நம் ஊரில், டிரைவர் இல்லாத ஆட்டோ எப்படி சாத்தியமாகும், இந்த ஆட்டோ எங்கெல்லாம் செயல்பாட்டுக்கு வரும்? என்பது குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு.மருத்துவம், விண்வெளி, தொழில்நுட்பம் என, அனைத்து துறையிலும் அசுர வேகத்தில் AI வளர்ந்து வருகிறது. இந்த வகையில், ஆட்டோ மொபைல் துறையிலும் ஏஐ தொழில்நுட்பம் தனது வேலையை தொடங்கி இருக்கிறது. இதற்கு உதாரணமாக தான், டிரைவரே இல்லாத வாகனம் மக்கள் பயன்பாட்டுக்கு வர சைலண்ட் மோடில் வேலை நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒமேகா செக்கி மொபிலிட்டி (Omega Seiki Mobility) என்ற நிறுவனம், டிரைவரே இல்லாமல் இயங்கும் ஆட்டோமெட்டிக் எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஸ்வயம்காத்தி (Swayamgati ) என பெயரிடப்பட்டு இருக்கும் டிரைவர் இல்லாத ஆட்டோ, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. அவசரத்துக்கு யாரையும் எதிர் பார்க்காமல், ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து, எங்கே போக வேண்டும் என்று, சொன்னால் போதும். அதுவே அந்த இடத்துக்கு கொண்டு போய் விட்டு விடுமாம். இந்த டிரைவர் இல்லாத ஆட்டோ, ஆரம்பத்தில் குறைந்த தூரம் மட்டுமே பயணிக்கும் என கூறப்பட்டு உள்ளது. அதாவது குறைந்த தூரம் இருக்கும் ஏர்போர்ட், இன்டஸ்ட்ரீயல் பார்க், ஐடி கேம்பஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்குள் டிரைவர் இல்லாத ஆட்டோவை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில், ப்ரீ-மேப்பிங் மூலம் பயணிக்க கூடிய தூரம் மற்றும் இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஏர்போர்ட்டில் ஒருவர் டிரைவர் இல்லாத ஆட்டோவில் ஏறிக் கொண்டு பார்க்கிங் போக வேண்டும் என கூறினால், ஆட்டோ ஆட்டோமேட்டிக்காக அங்கு சென்று விடும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் தொழில்நுட்பத்தில் இந்த ஆட்டோ 12 கிமீ வேகத்தில் இயங்கும் என்றும், வாகனம் பயணிக்கும் போது 6 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால் அதை கணித்துக் கொண்டு வாகனம் தனது பாதையை மாற்றிக் கொள்ளுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இப்படி மனிதர்களுக்கு வேலையில்லாத இந்த ஆட்டோவின் ஆரம்ப விலை 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த ஆட்டோ விரைவில் நடைமுறைக்கு வரலாம். குறுகலான மற்றும் கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளில் இந்த ஆட்டோமேட்டிக் எலக்ட்ரிக் வாகனம் இயங்குவது சாத்தியமா? என்ற கேள்வியும், இப்படி ஒரு வாகனம் செயல்பாட்டுக்கு வந்தால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.எனினும், ஆட்டோமெட்டிக் ஆட்டோ 2030க்குள் அதிகளவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கபபடுகிறது. அப்படி செயல்பாட்டுக்கு வந்தால், சாலை போக்குவரத்தில் இது பெரிய புரட்சியாக இருக்கும். புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள் மக்களே...