Also Watch
Read this
நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் பேரழிவு ஏற்படுத்திய காட்டாற்று வெள்ளம் குறித்து விஞ்ஞானிகளின் ஆய்வு செய்து வருகின்றனர்.

கிண்ண பனிப்பாறை தகர்ந்து...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) முக்கிய அங்கமான, ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலைவுணர் மையம் (NRSC - National Remote Sensing Centre), செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த பேரிடர் குறித்த முதல்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது.

இந்திய மற்றும் சர்வதேச செயற்கைக்கோள் படங்களின் கூட்டுப் பங்களிப்பைப் பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இந்த பேரழிவிற்கு கிண்ண பனிப்பாறை தகர்ந்து, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அது கிண்ணப் பனிப்பாறை? அது எப்படி பேரழிவுக்கு காரணம் ஆனது?

பனிப்பாறை சரிவு, காட்டாற்று வெள்ளம்
கிண்ணப் பனிப்பாறை என்பது மலையின் சரிவுப் பகுதியில் உள்ள கிண்ண வடிவ பள்ளத்தில் பனிக்கட்டிகள் நீண்ட காலமாகக் குவிந்து உருவாவதாகும். உயரமான பகுதிகளில் ஏற்படும் சிறு அளவிலான பனிச்சரிவுகளால் பனிக்கட்டிகள் சேர்ந்து கிண்ணப் பனிப்பாறைகள் பெருத்து விடுகின்றன. புவியியல் அல்லது காலநிலை காரணிகளால், இவை நிலைத்தன்மை இழக்கும்போது, பெரும் பனிச்சரிவை உருவாக்குகின்றன. திபெத்தில் சரியாக இதுவே நடந்திருக்கலாம் என்றும், நேபாளத்தில் இந்த கொடிய வெள்ளத்திற்கு வழிவகுத்த சங்கிலித் தொடர் வினையை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் முதல்கட்ட பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

முதல்கட்ட ஆய்வில்...
தேசிய தொலைவுணர் மையமமான, என்.ஆர்.எஸ்.சி.யின் மதிப்பீட்டின்படி, இந்த பேரழிவு திபெத்தின் உயரமான மலைப்பகுதிகளில் தொடங்கியுள்ளது. அங்கு ஏற்பட்ட 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 'கிண்ண வடிவ பள்ளத்தில் அமைந்த பனிப்பாறை' சரிவை தூண்டி இருக்கலாம் என முதல்கட்ட ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதனால் பிரமாண்ட பனிப் பாறை சரிவு (ice rock avalanche) ஏற்பட்டு, செங்குத்தான மலைப் பள்ளத்தாக்கில் அதிவேகமாக கீழே இறங்கியுள்ளது.

இந்த பனிச்சரிவு தற்காலிகமாக ஒரு ஆற்றின் பாதையை அடைத்திருக்கலாம் என்றும், அந்த அடைப்பு உடைந்தபோது, சேறு, பாறைகள் மற்றும் குப்பைகள் சேர்ந்து நீர் கீழ்நோக்கி பெருக்கெடுத்து ஓடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் விளைவாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் திரிசூலி ஆற்றில் (Trishuli river system) பாய்ந்து, பயங்கரமான வெள்ளப்பெருக்கையும் பரவலான அழிவையும் ஏற்படுத்தியுள்ளது.

பேரழிவை தடமறிய உதவிய இந்திய செயற்கைக்கோள்
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் 56 செயற்கைக்கோள்களை விண்வெளி சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டுள்ளன. தரைவழியாகச் செல்ல முடியாத அல்லது அணுகமுடியாத மிகவும் கடினமான சூழ்நிலைகளில், இத்தகைய விரைவான செயற்கைக்கோள் மதிப்பீடுகள் அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பற்றிய தெளிவான படத்தை வழங்குவதன் மூலம் பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பேரிடருக்கு முன்பும் பின்பும்
புயல் மற்றும் நிலச்சரிவு முதல் வெள்ளம் மற்றும் காட்டுத்தீ வரை, செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு அவசரகால மீட்புக் குழுவினருக்கு ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாறியுள்ளது. ரசுவா வெள்ளத்தைப் பொறுத்தவரை, பேரிடருக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிடும் திறன், பாதிக்கப்பட்ட பகுதியை விரைவாக அடையாளம் காணவும் வெள்ளத்தை தூண்டிய வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவும் உதவியது.

விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்
இமயமலைப் பகுதி பொதுவாகவே நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய அதிக வாய்ப்புள்ள பகுதி. இந்தியாவின் நிலநடுக்க கண்காணிப்பு நெட்ஒர்க் (India's earthquake monitoring network), ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 8:22 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை பதிவு செய்துள்ளது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) இந்த நிலநடுக்கத்தை நேபாளத்தின் ரசுவா பகுதியில் நேரிட்டதாக பதிவு செய்துள்ளது. இந்த நிகழ்வின் அளவு மற்றும் தாக்கத்தை புரிந்து கொள்வதற்காக, ஹைதராபாத்தில் உள்ள என்.ஆர்.எஸ்.சி விரைவான புவிசார் இடம் சார்ந்த மதிப்பீட்டை (rapid geospatial assessment) மேற்கொண்டது.

செயற்கை கோள் ஒப்பீடு
விஞ்ஞானிகள் ஆகஸ்ட் 24 அன்று ஐரோப்பிய சென்டினல் 2 (Sentinel 2) செயற்கைக்கோள் எடுத்த பேரிடருக்கு முந்தைய படங்களையும், ஆகஸ்ட் 26 அன்று இஸ்ரோவின் ரிசோர்ஸ்சாட் 2ஏ (Resourcesat 2A) எடுத்த பேரிடருக்கு பிந்தைய படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். மேலும், நிலப்பரப்பு மாற்றங்களை மதிப்பிடவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணவும், ஏப்ரல் 4, 2026 அன்று எடுக்கப்பட்ட முந்தைய ரிசோர்ஸ்சாட் 2ஏ படத்தையும் தற்போதைய வெள்ளத்திற்கு பிந்தைய படங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். செயற்கைக்கோள் ஒப்பீட்டின் மூலம், ஆற்றின் பாதையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதும், நீண்ட தூரத்திற்கு குப்பைகள் படிந்து வெள்ளக்காடாக மாறியுள்ளதும் தெரியவந்துள்ளது.

முக்கிய எடுத்துக்காட்டு
இந்த படங்கள் விஞ்ஞானிகளுக்கு மாறிய நிலப்பரப்பை மேப்பிங் செய்யவும், மலைப்பகுதிகளில் இந்த பேரழிவு எவ்வாறு பரவியது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவியது. பேரிடர் மேலாண்மையில் விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்தி உள்ளது. என்.ஆர்.எஸ்.சி.யின் இந்த பகுப்பாய்வு, இந்திய செயற்கைக்கோள்கள் இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள இயற்கை பேரிடர்களைக் கண்காணிக்க எவ்வாறு உதவுகின்றன என்பதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved