Also Watch
Read this
சைபர் மோசடிக்கு வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டவர்கள் மீது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 120 பேரில், 37 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில், மீதமுள்ளோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதிரடி போலீசார்...
15 சைபர் மோசடி வழக்குகள்
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை
120 பேரிடம் விசாரணை
37 பேர் கைது
41A நோட்டீஷ் உடன் மற்றவர்கள் விடுவிப்பு...
சென்னை காவல் ஆணையரகத்தில் இரவு வரை காத்திருந்த உறவினர்களின் பரிதாபம் தான் இது.

தமிழகம் முழுவதும்...
சைபர் மோசடி கும்பலின் பணப் பரிமாற்றத்திற்கு வங்கி கணக்குகளை வாடகைக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை குறிவைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். டிஜிட்டல் அரெஸ்ட், ஆன்லைன் டிரேடிங் உள்ளிட்ட பல்வேறு சைபர் மோசடி வழக்குகளில், மோசடி செய்யப்பட்ட பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது என்பது குறித்து போலீசார் விரிவான ஆய்வு நடத்தினர்.

பல மணி நேர விசாரணை
இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 350 சந்தேக நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, முதல் கட்டமாக 120 பேரை சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், வங்கி கணக்குகளை கமிஷனுக்காக வாடகைக்கு விட்டதாக கூறப்படும் "மணி மியூல்கள்," அவர்களை இணைத்த ஏஜெண்டுகள் மற்றும் சைபர் மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

37 பேர் அதிரடியாக கைது
கடந்த வியாழக்கிழமை வரை 80 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், வெள்ளியன்று மேலும் 40 பேரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பலரும் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

விசாரணையின் முடிவில், சைபர் மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது உறுதியான 37 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ளவர்களுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41A-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு விடுவித்தனர்.

சைபர் மோசடிக்கு எதிராக...
ஒரே நேரத்தில் 15 சைபர் மோசடி வழக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதால் சென்னை காவல் ஆணையரகத்தில் பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு நீண்ட நேரம் கூடியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கெனவே, சென்னை சைபர் கிரைம் போலீசார் ஐந்து மாநிலங்களில் நடத்திய நடவடிக்கையில் வட மாநிலங்களைச் சேர்ந்த 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், தற்போதைய நடவடிக்கையும் சைபர் மோசடிக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
சைபர் மோசடிக்கு துணைபுரியும் வங்கி கணக்கு வாடகை வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கை தொடரும் என சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved