Also Watch
Read this

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதன், வீராங்கனை பேபி சஹானா ரவி ஆகிய இருவருக்கும், 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக இருவரையும் பாராட்டிய முதல்வர் விஜய், வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள்
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி உள்ளிட்டோர் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
400 மீட்டர் டி20 தடகளத்தில் தீப்தி ஜீவன்ஜி 56.36 விநாடிகளில் இலக்கைக் எட்டி தங்கபதக்கம் வென்றார்.

ஈட்டி எறிதலில் ஆடவருக்கான F 53/54 பிரிவில் பிரதீப் குமார் 27.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஆயுஷ் வர்மா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
அதேபோல் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், சோனல்பென் படேல், பிராச்சி பாண்டே, பேபி சஹானா ஆகியோர் வெண்கல பதக்கத்தை வென்றனர்.

மனிஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம்
ஆசிய பாரா விளையாட்டில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நட்சத்திர வீரர் மனிஷ் நர்வால் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மேலும், பாரா பவர்லிஃப்டிங் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அசோக் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம், 5 தங்கம் உட்பட இந்தியாவின் மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved