news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
tv

Also Watch

சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

ஸ்டாலின், இபிஎஸ், ரஜினி உள்ளிட்டோரும்...

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு, தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் இரங்கல்
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறி இருப்பதாவது;
"தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
சிரித்த முகம், சிந்தையைக் கவரும் தமிழ், மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடு தான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் என்றாலே பாப்பையா தான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இபிஎஸ் இரங்கல்
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறி இருப்பதாவது;
தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த
தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா.
அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி இரங்கல்
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறி இருப்பதாவது;

படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ரஜினி கூறி உள்ளார்.

Related Link
பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்

பேராசிரியர் சாலமன் பாப்பையா காலமானார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சரிவு, பிற்பகலில் உயர்வு

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved