Also Watch
Read this
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள், காலை உணவு விரிவாக்கம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு விரிவாக்கம்
இதுதொடர்பாக, தமிழக அரசு கூறி இருப்பதாவது;
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து, கல்வியில் முழுமையான கவனம் செலுத்திடவும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டம் விரிவாக்கம்
இந்த திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர். இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 447 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தாலும், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள 2,150 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தாலும் காலை உணவு வழங்கப்படும்.

சென்னையில் முதல்வர் விஜய்
மாணவர்களின் உடல் நலம், ஊட்டச்சத்து, பள்ளி வருகை, கற்றல் ஆகிய அம்சங்களை ஒருங்கிணைத்து, பள்ளிக் கல்வியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனை முதல்வர் விஜய் வரும் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.

மாணாக்கர்கள் அனைவருக்கும் சூடான, சுவையான, உரிய அளவிலான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்பட வேண்டுமென்றும், இந்த திட்டத்தில் பணியாற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து செவ்வனே செய்திட வேண்டுமென்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved