Also Watch
Read this
மகளிர் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டுமென முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார். தொகுதி மறுசீரமைப்புடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இணைக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை தற்போது உள்ள நிலையிலேயே நீடிக்க வேண்டும் என, முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியதோடு, தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில்...
தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அரசினர் தீர்மானத்தை முதல்வர் விஜய் தாக்கல் செய்து, பேசியதாவது:
தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை கூட்டம், தமிழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் தமிழ்நாடு அரசால், ஆகஸ்ட் 8ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.

அந்த கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் 11 உறுப்பினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 உறுப்பினர்களும், இ.கம்யூ. கட்சியின் 2 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உறுப்பினரும் மற்றும் மதிமுக உறுப்பினரும் என 6 கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை தொடர்பாக, விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையில், சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் இயற்றலாம் என முடிவானது.

மக்கள் தொகையின்படி...
இந்தியாவில் 1952ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிற மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்து 1976 வரை தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 1976ஆம் ஆண்டு 42ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தப்படி, மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் மாநிலங்களுக்கு மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக அடுத்த 25 ஆண்டுக்கு, 1971ஆம் ஆண்டு மக்கள்தொகைப்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வைக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டது.

தோல்வியடைந்த மசோதா
இதேநிலையை முன்னிறுத்தி, 84ஆவது மற்றும் 87ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1971 மக்கள்தொகைபடி, மக்களவை தொகுதிகள் நிலை நிறுத்தப்பட்டன. இந்த திருத்தங்களின் நோக்கமே, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை செயல்படுத்திய மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தான். இந்த 25 ஆண்டு கணக்கு, 2026ல் முடிகிறது. இதை முன்னிட்டு கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வந்த மறுசீரமைப்பு தடையை அகற்றி 2011 மக்கள்தொகை அடிப்படையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா ஏப்ரல் 2026ல் அறிமுகப்படுத்தப்பட்டு, தோல்வியில் முடிந்தது.

எண்ணிக்கை குறைய வாய்ப்பு
தற்போது, மீண்டும் ஒன்றிய அரசு மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க செய்து மசோதாவை அறிமுகப்படுத்த உத்தேசித்து இருப்பதாக சில அரசியல் கட்சிகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த மசோதா குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில் விவாதித்த போது, தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள மசோதா நிறைவேறினால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா 50% மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை முதலில் அதிகரித்தாலும், அதனைத் தொடர்ந்து 2026 மக்கள் தொகைக்கு பிறகு அரசியலமைப்புப் பிரிவு சட்டம் 812A அதன் கீழ், மாநிலத்தின் மக்களவையின் அடிப்படையில் தொகுதிகள் மறு சீரமைக்கப்படும். இப்படி செய்தால், தென்மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

மக்கள் தொகை கட்டுப்பாடு
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை சிறப்பாகப் செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பெரும் அரசியல் பிரதிநிதித்துவ அநீதி இழைக்கப்படும். சர்வ வல்லமை பெற்றதாக, மறுசீரமைப்பு ஆணையம் உள்ளது. இந்த அதிகாரத்தை தவிர்த்து பாராளுமன்றத்திற்கே இறுதி செய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி, பொருளாதார முன்னேற்றம் பெற்று வரும் நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அப்படியே நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது.

543 என்ற அளவிலேயே...
எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும் மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும். இதற்குத் தேவையான உரிய சட்டத்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

கட்சி வேறுபாடின்றி...
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தினை அமல்படுத்த மேலும் காலதாமதம் இல்லாமல் தற்போது 543 என்ற நிலையிலேயே மூன்றில் ஒரு பங்கு தொகுதி, மகளிருக்கு என வருகின்ற 2029 பாராளுமன்றத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முன்மொழியும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, மேற்கூறிய காரணங்களால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சியின் தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு தமிழ்நாட்டை முன்னிறுத்தி, கட்சி வேறுபாடு இன்றி ஒருமித்த குரலில் பேச வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நாம் முன்மொழிகிற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு முதல்வர் விஜய் உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved