Also Watch
Read this

"தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றக் கோரி, 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த சங்கரலிங்கனார் நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் விஜய் வீரவணக்கம் செலுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க சங்கரலிங்கனாரின் உறுதியும், தியாகமும் நமக்கு வழிகாட்டட்டும் என்றும் கூறி உள்ளார்.
தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல போராட்டங்கள் அடங்கியிருந்தாலும், உயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை இல்லை என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியதோடு, தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்கும் வரை சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது எனக் கூறி உள்ளார்.

முதல்வர் விஜய்...
இதுதொடர்பாக, முதல்வரும் தவெக தலைவருமான விஜய் கூறி இருப்பதாவது;
நமது மாநிலத்திற்கு, "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மை கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாள் உறுதியான உண்ணா நோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

தனது கொள்கையிலும், தமிழ் மண்ணின் தன்னாட்சிப் பெருமையிலும் எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல், உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் கூறி உள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனார் நினைவு நாள்.
வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறு தான், விருதுநகர் தந்த வீரத்தியாகி சங்கரலிங்கனாருடையது.

தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்தார். இறுதியில் உயிரையே துறந்தார்.
ஆயினும் அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி அமையும்வரை காலம் கனியவில்லை.

வென்றது திமுக, வந்தார் அண்ணா, நிறைவேற்றினார் தீர்மானத்தை, தமிழ்நாடு தமிழ்நாடானது. தமிழ்நாடு பெயர்சூட்டலில் பல பேரின் போராட்டங்கள், தியாகங்கள், திமுகவின் சளைக்காத முயற்சிகள் அடங்கியுள்ளன. ஆனால், இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது. தமிழ்நாடு வாழ்க.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved