Also Watch
Read this
எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். கட்சியின் நிலைப்பாட்டினை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் அறிக்கை
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டப்பேரவையில் தன்னிச்சையாக, தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது, கட்சியின் குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணானது.

மிகப்பெரிய துரோகம்
காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அமமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம்.

கட்சியில் இருந்து நீக்கம்
ஆகவே, கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல், காமராஜ் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.