Also Watch
Read this
வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பணிக்கு பிறகு கள்ள ஓட்டு இருக்காது என தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டு பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் எங்கெல்லாம் கள்ள ஓட்டு பதிவானது என்பது குறித்து பார்க்கலாம்...

ஓட்டு செலுத்தப்பட்டு விட்டதாக கூறியதால் அதிர்ச்சி
திருப்பூர், சூர்யா நகரை சேர்ந்த 66 வயது முதியவர் சுப்பிரமணியன், விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தெற்கு தொகுதிக்குட்பட்ட கேடிசி தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 118ஆவது வாக்குச்சாவடிக்கு சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்தார். ஆனால், அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு விட்டதாக வாக்குச்சாவடி அதிகாரி கூறியதால் அதிர்ச்சியடைந்த அவர், தனக்கு சேலஞ்ச் ஓட்டு வழங்கக் கோரி காத்திருப்பில் ஈடுபட்டார்.

ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த "கன்னி" வாக்காளர்
தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதிக்கு உட்பட்ட அல்லிநகரம் பகுதியை சேர்ந்த முதல் தலைமுறை வாக்காளரான 19 வயது இளம்பெண் யாழினி, ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்தார். அப்போது அவரது ஓட்டை வேறு யாரோ கள்ள ஓட்டு போட்டு இருப்பது தெரியவந்த நிலையில், பலகட்ட ஆலோசனைக்கு பிறகு டெண்டர் முறைப்படி அவர் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது.

வேறொருவர் செலுத்தியதால் அதிர்ச்சி
தேனி மாவட்டம், போடி தொகுதி சின்னமனூர் அருகே உள்ள எம்.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கிலியம்மாள், அங்குள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றபோது, அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வாக்களிக்காமலேயே வேதனையுடன் திரும்பிச் சென்றார்.

அதிகாரிகளிடம் வாக்குவாதம்
சென்னை, ஆலந்தூர் தொகுதி ஏஜிஎஸ் நிதி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு மணிகண்டன் என்பவர் வாக்களிக்க வந்தபோது, அவரது ஓட்டு ஏற்கெனவே போடப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

டெண்டர் ஓட்டு போடுவதற்கு காத்திருப்பு
மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட அவையாம்பிகை நகர் புது அக்ரஹாரத்தை சேர்ந்த நவீன்குமார், சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வந்திருந்தார். அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 151ஆவது வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் டெண்டர் ஓட்டு போடுவதற்காக அவர் 2 மணி நேரம் காத்திருந்தார்.

கள்ள ஓட்டு போட்டிருந்ததால் வாக்குவாதம்
சென்னை, திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் விஜயகுமார், தனியார் பள்ளியில் வாக்களிக்க சென்றபோது, ஏற்கனவே வாக்கு செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சிடைந்த அவர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தன்னை போலவே 3 பேரின் ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காத்திருந்த சோகம்
மதுரை, மேலூர் சொக்கம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க சென்றபோது, அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகி விட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்தவர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில், டெண்டர் முறையில் வாக்கு செலுத்த நீண்ட நேரம் காத்திருந்தார்.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்
மேலூர் சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் ராதிகா என்பவர் வாக்கு செலுத்த வந்தபோது, அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினரான திமுக பிரமுகர், தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிக்கவே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முதன்முறை வாக்காளர், அதிர்ச்சி
திண்டுக்கல் மாநகராட்சி 128ஆவது வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க சென்ற முதல் தலைமுறை வாக்காளர் துவாரகேஷ், தனது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால் விரக்தி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே, டெண்டர் முறையில் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved