தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீது ஆளுநர் கருத்து கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டு, மசோதாவை ஆய்வு செய்யுமாறு ஆளுநர் அளித்த பரிந்துரைகளை, பேரவை நிராகரிப்பதாக கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவானது, நிதி சட்ட முன்வடிவு என்ற வகைப்பாட்டில் வருவதால், இதனை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநரின் பரிந்துரை பெறப்பட வேண்டும். பொது மக்களின் கருத்தை அறிந்து, வரப்பெற்ற கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, மக்களாட்சியை ஒரு தூணாக கருதப்படும் நிர்வாகத்தால், இந்த சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு, சட்டத்துறையால் சரிபார்க்கப்பட்டு, பல கட்டங்களாக பரிசீலிக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.ஆனால், ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின்படி பின்பற்றப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், இச்சட்ட முன்வடிவில் உள்ள பிரிவுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்து, அந்த கருத்துக்களை சட்டப்பேரவை உறுப்பினர்களின் கவனத்துக்கு பொருத்தமான முறையில் கொண்டுவர வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இது, அரசமைப்பு சட்டத்துக்கும், பேரவை விதிமுறைகளுக்கும் முரணானது.ஒரு சட்டமுன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே, அதில் திருத்தங்களை முன்மொழியவோ, விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் திருத்தங்களை திரும்பப் பெறவோ, இல்லையெனில் வாக்கெடுப்பு கோரவோ அதிகாரம் உள்ளது. சட்டமுன்வடிவு பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை.எனவே, ஆளுநர் குறிப்பில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை இந்த மாமன்றம் ஏற்றுக்கொள்ள இயலாது. பேரவையின் மாண்பை குறைக்கக் கூடியது என்பதால், இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.ஆளுநர் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவை பேரவையில் ஆய்வு செய்ய ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கக்கூடிய அவரின் கருத்துக்கள் மற்றும் பேரவையின் மாண்பை குறைக்கக்கூடிய வார்த்தைகள் அடங்கிய பகுதிகளை இந்த பேரவை நிராகரிக்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.