Also Watch
Read this

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் நடைபெற்ற முக்கிய மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 2ஆவது இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் முழுமையான ஆதிக்கம் செலுத்திய ராஜஸ்தான் அணி, ரசிகர்களுக்கு விறுவிறுப்பான வெற்றியை பரிசளித்தது.

சன்ரைசர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 ரன்கள் எடுத்தார். ஆனால், இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஹைதராபாத் பந்துவீச்சை சிதறடித்தார். அவரது இன்னிங்ஸில் 12 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் இடம்பெற்றன. அவருக்கு துணையாக துருவ் ஜுரேல் 21 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ரியான் பராக் 26 ரன்கள் எடுத்ததால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற மலைபோன்ற இலக்கை நிர்ணயித்தது. சன்ரைசர்ஸ் அணியின் ப்ரஃபுல் ஹிங்கே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

கடின இலக்குடன்...
244 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்கள், சலில் அரோரா 35 ரன்கள், இஷான் கிஷன் 33 ரன்கள் எடுத்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் அணி மீள முடியவில்லை. ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ரவீந்திர ஜடேஜா மற்றும் சுஷாந்த் மிஸ்ராவும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

2ஆவது இறுதிப்போட்டிக்கு...
இதன் மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது 2ஆவது இறுதிப்போட்டிக்குள் முன்னேறி கோப்பையை நோக்கிய பயணத்தை தொடர்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved