Also Watch
Read this
2003ல் தொடங்கிய ஈராக் போர், சதாம் உசேனின் ஆட்சியை அகற்றிய அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாகும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், ஈராக் போரின் புவிசார் அரசியல் விளைவுகள் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா வெளியேறும் இடத்தை ஈரான் நிரப்பக்கூடும் என்ற அச்சமும், ஈராக் பாதுகாப்பில் புதிய வெற்றிடம் உருவாகலாம் என்ற எச்சரிக்கையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சதாம் உசேனுக்கு எதிராக...
2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்தச் சூழலில், ஈராக் அதிபர் சதாம் உசேன், அணு, உயிரியல் மற்றும் வேதியியல் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அவற்றைத் தொடர்ந்து உருவாக்கி வருவதாகவும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் வாதிட்டது.

‘ஆபரேஷன் ஈராக் ஃப்ரீடம்’
அமெரிக்கா தலைமையில் ராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டு 2003 மார்ச் 20ஆம் தேதி, ‘ஆபரேஷன் ஈராக் ஃப்ரீடம்’ தொடங்கியது. அமெரிக்கா தலைமையிலான படைகள் மிகக் குறுகிய காலத்திலேயே ஈராக் ராணுவத்தைத் தோற்கடித்து, ஏப்ரல் 9ஆம் தேதி பாக்தாத்தை கைப்பற்றின. சதாம் உசேன் தலைமறைவானார். பின்னர் 2003 டிசம்பரில் பிடிபட்டார். 2006ல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

பேரழிவு ஆயுதங்கள் கிடைத்ததா?
அமெரிக்காவின் போர் நடவடிக்கைக்கு முன்வைக்கப்பட்ட முக்கிய காரணங்களில் ஒன்று ஈராக்கின் பேரழிவு ஆயுதங்கள். ஆனால் போர் முடிந்த பின்னர் நடத்தப்பட்ட தேடுதல்களில் அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஈராக்கில் சுமார் 4,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அரசியல் வெற்றியா?
ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஈராக்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கு போர் மற்றும் ஆக்கிரமிப்புச் செலவு சுமார் 3 டிரில்லியன் டாலர் அளவுக்கு சென்றது. பெரும் விலை கொடுத்துப் பெறப்பட்ட அமெரிக்காவின் ராணுவ வெற்றி அரசியல் வெற்றியாக மாறவில்லை.

மத மோதல்கள்...
காரணம், சதாம் ஆட்சி கவிழ்ந்த பிறகு கிளர்ச்சி உருவானது. மத அடிப்படையிலான மோதல்கள் தீவிரமடைந்தன. ஈராக் பல ஆண்டுகள் வன்முறையால் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சதாம் உசேன் ஆட்சி ஈரானின் மிகப்பெரிய பிராந்திய எதிரிகளில் ஒன்றாக இருந்தது. 1980களில் இரு நாடுகளும் நீண்ட மற்றும் மிகக் கொடூரமான போரில் ஈடுபட்டிருந்தன. 2003ல் அமெரிக்கா சதாம் ஆட்சியை அகற்றியபோது, ஈரானுக்கு எதிராக இருந்த ஒரு முக்கிய சக்தி அகற்றப்பட்டது.

ஈரானின் செல்வாக்கு
புதிய ஈராக் அரசியலில் ஷியா கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்தது. இதன் மூலம் ஈரானுக்கும் ஈராக்கின் அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் வலுப்பெற்றன.
சதாம் உசேனை அகற்றுவதன் மூலம் அமெரிக்கா அடைந்த ஒரு முக்கியமான ராணுவ இலக்கு, நீண்ட கால அடிப்படையில் ஈரானின் பிராந்திய செல்வாக்கு விரிவடைவதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved