Also Watch
Read this
தண்ணீர் பிரச்சினை குறித்து பேசுவதற்காக, ஆந்திரா சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நவராத்திரி விழாவையொட்டி விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் ஆலயத்தில் நடந்த விசேஷ பூஜையிலும் கலந்து கொண்டார்.
முதலமைச்சர் விஜய் சிறப்பு வழிபாடு நடத்திய கனகதுர்கை அம்மன் ஆலயம் எங்கு உள்ளது? அந்த ஆலயத்தின் சிறப்புகள் என்ன? இத்தலம் எப்படி உருவானது? கனக துர்கையை வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்கும்?

ஆந்திராவில் முதல்வர் விஜய்
ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான தண்ணீர் பிரச்சினை இன்று நேற்று நடப்பதல்ல. அரை நூற்றாண்டு காலமாக தொடரும் ஒரு பிரச்சினை. இதுகுறித்து பேசுவதற்காக ஆந்திரா சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், விஜயவாடா ஸ்ரீ கனகதுர்கை அம்மன் கோவிலிலும் விஷேச வழிபாடு, பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டார்.

ஆலயத்தின் வாயிலிலேயே திலகமிட்டு, வாழ்த்தி வரவேற்ற கோவில் நிர்வாகத்தினர், முதலமைச்சர் விஜய்க்காகவே வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடத்தி சிறப்பு வழிபாடுகளும் நடத்தினர்.
இந்நிலையில், கனகதுர்கை அம்மன் ஆலயத்தின் சிறப்புகளை கூகுளில் தேடி பலரும் வியந்து வருகின்றனர்.

கனகபுரி கிராமத்தில்...
விஜயவாடா கனகபுரி கிராமத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ளது கனக துர்கை அம்மன் ஆலயம். காவல் தெய்வமாக வணங்கப்படும் அம்மனின் 51 பீடங்களில் இதுவும் ஒன்று. 8 கரங்கள், 4 அடி உயரம் மற்றும் அமைதியான புன்னகையுடன் கருவறையில் கம்பீரமாக காட்சியளிக்கும் கனகதுர்கையை காணவே கண்கோடி வேண்டும் என பக்தர்கள் உருகுவதுண்டு.
நொடியில் மனம் குழையச்செய்யும் இத்தலம் உருவானதே சுவாரசியம்தான். கீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள்வேண்டி தவம் செய்துள்ளான். அந்த தவத்தில் மகிழ்ந்த துர்கையும் கண்முன்காட்சி கொடுக்க, அன்னையே நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும் என்ற வரம் கேட்டானாம் அசுரன்.
கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்கையும் மகனே நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில், அரக்கர்களை அழித்தபின் நான் உன் இதயத்தில் வாசம் செய்வேன் என வரமளித்தாராம்.

மலை மேல்...
துர்கையின் ஆணைப்படியே மலையாக மாறினானாம் கீலா. மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த அன்னை துர்கா, கீலா மலை மீது அஷ்டகரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்துள்ளார். மகிஷாசுரனை அழித்த சந்தோஷத்தில் இத்தலத்தில் தங்க மழை பொழிய செய்ததாலேயே அம்மன் கனகதுர்கை என பெயர்பெற்றுள்ளார்.
கனகம் என்றால் பொன். துர்கை என்றால் அணுக முடியாத கோட்டை. தங்கம் போல் ஜொலிக்கும் வெல்ல முடியாத தேவியே கனகதுர்கை. அதேபோல், அன்னை தனது மூக்குத்தியைக் கிருஷ்ணா நதியிடம் தற்காலிகமாகக் கடன் வாங்கியதாகவும், அதைத் திரும்பத் கொடுக்காததால் நதி எப்போதும் மலையை தொட்டுச் செல்ல முயல்வதாகவும் ஐதீகம் இருப்பதால் அம்மனின் மூக்குத்தி கழற்றப்படுவதே இல்லை எனவும் புராணம் கூறுகிறது.
மேலும், இக்கோவிலில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை நிறுவியதாகவும், அதன் மூலம் அம்மனின் உக்கிரம் தணிக்கப்பட்டதாகவும் தலவரலாறு கூறுகிறது.

துர்க்கையை சரண் அடைந்தால்...
அம்மனின் மூலஸ்தானம் மேல் தங்கக் கூரை போடப்பட்டுள்ள நிலையில் 260 படிக்கட்டுகள் வழியாக சென்று சன்னதியை அடையலாம். கனக துர்கையை வலிமை மிக்கவள். துஷ்ட சக்திகளை அழிக்க அவதாரம் எடுத்தவள். அசுரக்கூட்டத்தை துவம்சம் செய்தவள் என போற்றி வணங்குகிறார்கள்.
அதேபோல், துர்கையைச் சரணடைந்தால், நம் முந்தைய ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்றும் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்துவிடும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

சண்டி யாகம் செய்து...
துர்கையின் ஆசியால் எதிரிகளின் தொந்தரவு விலகி தங்கமழையே பொழியும் என நம்பும் பக்தர்கள் அரளி மாலை சாற்றி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். எதிரிகளை வீழ்த்தவும், தொட்ட காரியங்களில் இமாலய வெற்றி பெறவும் அன்னைக்குச் 'சண்டி யாகம்' செய்து வழிபடுவது அரசியல்வாதிகளின் வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
இத்தனை பெருமைகளையும், சிறப்புகளையும் உள்ளடக்கிய கனக துர்கையை தான் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved