Also Watch
Read this
தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, எம்பி கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு அரசியல் நாடகம் நடத்துவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

திமுக தான் எச்சரித்தது...
இதுதொடர்பாக, திமுக எம்பி கனிமொழி கூறி இருப்பதாவது;
தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழகத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.

மறுவரையறை மசோதா தோல்வி
அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான சட்ட முன்வரைவை பாஜக கொண்டு வந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார்.

புதியதாக எதுவும் இல்லை
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்ட முன்வடிவு குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், அது இன்னும் கையில் கிடைக்கப் பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை.

காவிரி, மேகதாது விவகாரம்
காவிரி, மேகதாது தொடர்பாக, தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. அனைவரும் கேட்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் தவெக அரசு கள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வு கூட்டத்தை தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.

திமுக பங்கேற்காது
தொகுதி மறுவரையறை கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டுமென்றால், அதற்கு முன்பாக தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுகவின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது.

தமிழக முதல்வர் தயாரா?
தமிழகத்தின் காவிரி உரிமையிலும் டெல்டா விவசாயிகள் மீதும் தவெக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறது என்றால், மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கிடத் தமிழக அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். தமிழக அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப தமிழக முதல்வர் தயாரா?
இவ்வாறு திமுக எம்பி கனிமொழி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved