Also Watch
Read this
சென்னை கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. "எம்எல்ஏவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும்," என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி ஸ்டாலின் தரப்பு கோரியதால், வழக்கை திரும்ப பெற நீதிமன்றம் அனுமதித்தது.

கொளத்தூர் தொகுதியில்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
அப்போது முறைகேடு நடந்ததாகக் கூறி, மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வெற்றி செல்லாது...
அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்று விட்டன எனவும், ஆறு வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களான விவிபேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும் எனவும், தவெக எம்.எல் ஏ. வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

45 நாட்களுக்கு பிறகு...
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை சரிபார்க்கக் கோரி, தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில், அதாவது மே 7ஆம் தேதியே விண்ணப்பித்து உள்ளதாகவும், ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார்.

தீர்ப்பு ஒத்தி வைப்பு
தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரணைக்கு உகந்தவை அல்ல. எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

திரும்ப பெற அனுமதி
வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கில், 2025ஆம் ஆண்டு அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved