Also Watch
Read this
மேகமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பு வழக்கில், விசாரணை நிறைவடைந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், "வெளியாட்கள் எந்த வகையிலும் மேகமலை வனப்பகுதியை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது," என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, இலவம்பஞ்சு தோட்டம் அமைப்பதாக கூறி, நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் குறித்து நீதிமன்றம் கடுமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளது.

தொடரும் போராட்டம்
இத்தனை ஆயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராடியும், அவர்கள் எதிர்பார்த்த எந்த சாதகமான முடிவும் எட்டப்படாமல் ஏமாற்றமே மிஞ்சும் போலிருக்கிறது.
வனத்துறையின் கெடுபிடிகளுக்கு எதிராகவும், பரம்பரை வாழ்வாதாரத்தை மீட்க கோரியும் வருசநாடு - மேகமலை பகுதி மக்கள் நடத்திய தொடர் காத்திருப்பு போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்களுடன் தனியார் பள்ளி ஆசிரியர்கள், அமைப்பினர் எனப் பல தரப்பினரும் கைகோர்த்தனர்.

ஐந்து தீர்மானங்கள்
எங்கள் உரிமை எங்கள் குரல் என்ற முழக்கங்களோடு, பெண்கள் கும்மியடித்து எச்சரிக்கை பாடல்களை பாட, கடமலைக்குண்டே கிடுகிடுத்துப்போனது. போராட்ட களத்தில் மக்கள் திரண்டு, வனத்துறையின் அடாவடிகளுக்கு எதிராக 5 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தனர். வனத்துறையால் முடக்கப்பட்ட சாலை வசதி, வீடு கட்டுதல் பணிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்பதும், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை சோதனை சாவடிகளில் வனத்துறை போட்டுள்ள கெடுபிடி நேர கட்டுப்பாடு தூக்கியெறிய வேண்டும் என்பதுமே மக்களின் முதன்மை முழக்கமாக இருந்தது.

மேகமலை வழக்கு விசாரணை
அதேபோல, விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து தருவதோடு, ஆழ்துளை கிணறு தோண்டும் வண்டிகளுக்கான தடையை நீக்க வேண்டும் எனவும், பல தலைமுறைகளாக உள்ள மக்கள் அனைவருக்கும் உடனடியாக நிபந்தனையற்ற நிலப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

ஒருபக்கம் கடமலைக்குண்டில் மக்கள் போராட்டம் தீயாக வெடித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேகமலை வழக்கு விசாரணைக்கு வந்தபோதோ, வாதப் பிரதிவாதங்களால் நீதிமன்ற அறையே அனல் பறந்து சூடானது.

ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும்
தமிழக அரசின் அறிக்கை, இலவம் பஞ்சு தோட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக் காட்டியபோது, அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மேகமலையில் பல பகுதிகள் முன்பு வனமாக இல்லை, 1978ல் தான் ரிசர்வ் வனமாக அறிவிக்கப்பட்டது. 1982லேயே மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுவிட்டது. தற்போது, பட்டா நிலங்களை எடுக்க முயன்றால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்கும் எனவும், அதேநேரம் ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் என்றும் மக்களுக்காக வாதிட்டார்.

ஊக்குவிக்க கூடாது...
ஆனால் நீதிபதிகளோ, வனம் என்றால் வனம் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியிருக்க வனப்பகுதியில் இலவம்பஞ்சு தோட்டம் அமைப்பதை அரசு ஏன் ஊக்குவிக்கிறது? ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும். வட்டிக்கு விடுபவர்களின் தொழிலுக்காக வனத்தை ஆக்கிரமிப்பதை ஊக்குவிக்கக் கூடாது என அதிரடி காட்டினர்.

ஆக்கிரமிப்பாளர்கள் முத்திரை...
இதற்கு அரசு தரப்பு, தோட்டம் அமைத்தவர்கள் வெளியாட்கள் அல்ல, அங்கு வாழும் மக்கள் தான். வன உரிமை சட்டம் வருவதற்கு முன்பு ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் முன் அவர்கள் தங்கள் நியாயங்களை வைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பல தலைமுறைகளாக வாழும் மக்களை திடீரென ஆக்கிரமிப்பாளர்கள் என்று எப்படி முத்திரை குத்த முடியும்? என வாதிட்டது.

தவறான முன்னுதாரணமாகிவிடும்
அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் பரமேஸ்வர், இங்கு இலவம்பஞ்சு தோட்டம் அமைக்க தூண்டியதே அரசுதான். எனவே தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு தர வேண்டியதும் அரசுதான். அதேநேரம், வன உரிமை சட்டத்தை பயன்படுத்தி இவர்கள் நில உரிமை கோரினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என எதிர்த்து வாதிட்டார்.

மக்களின் எதிர்காலம்?
அதற்கு அரசு தரப்பு, மக்களின் நலனை காக்க வந்த வன உரிமை சட்டத்தின் கீழ் பல தலைமுறை மக்கள் உரிமை கோருவதை எப்படி தடுக்க முடியும்? என திருப்பி அடித்தது. இருப்பினும், மக்கள் போராடியும் அவர்களுக்கு சாதகமாக எந்த உத்தரவும் பிறப்பிக்காமல், வெளி ஆட்கள் வந்து வனப்பகுதியை ஆக்கிரமிப்பதை எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

மக்களுக்கு சாதகமாக இல்லாத நீதிமன்ற நிலைப்பாட்டினால், களப்போராட்டம் ஓய்ந்திருந்தாலும் மேகமலை மக்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved