Also Watch
Read this
ஜெம் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னாள் முதலமைச்சரிடம் ஒப்புதல் வாங்கிய காவல்துறை உயரதிகாரிகள் வழக்கை முடிப்பதற்கு அனுமதி வாங்காமலேயே முந்தைய அரசுக்கு அல்வா கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாதி வரை தொழில் தர்மத்தை கடைப்பிடித்த காவல்துறை அதிகாரிகள், மறுபாதியிலேயே அதனை மீறியது, போக்சோ நீதிமன்றம் தலையில் குட்டு வைத்ததால்தான் வெளியிலேயே வந்துள்ளது.

போக்சோ வழக்கில் ஜெம் வீரமணி
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் ஒளிந்திருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே புகைந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமலேயே வழக்கை மூடிமறைக்க முயன்றுள்ளதாக மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது. அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வீரமணி புகார் குறித்து சென்னை மாநகர காவல்துறை தரப்பில் இருந்து NOTE அனுப்பட்டுள்ளது. அதனை, கவனித்த முன்னாள் முதல்வரும் வழக்கு தொடர அனுமதி அளிக்க, அதன்பிறகே வீரமணி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெயருக்கு விசாரணை
சாந்தியிடம் மட்டும் பெயருக்கு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மற்றபடி யாரையுமே விசாரணைக்கு அழைக்கவில்லை. வீரமணி தான் கோடிகளை கொடுத்து அதிகாரிகளின் கைகளையும், வாயையும் கட்டிப்போட்டு அரசுக்குக்கூட தெரியாதவாறு பார்த்துக் கொண்டதாக தெரிகிறது. நடவடிக்கை எடுப்பதற்கு எந்த ஆதாரமுமே இல்லை, சிசிடிவி காட்சியில் இருக்கும் முதியவரும் சரி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியும் சரி யாரென்றே தெரியவில்லை எனக்கூறி வழக்கையே முடிப்பதற்காக, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தை நாடி உள்ளனர் காவல்துறை உயரதிகாரிகள்.

கேள்விகளால் துளைத்த...
அது எப்படி? முதியவரின் அடையாளமே தெரியவில்லை எனக்கூறிவிட்டு வீரமணி என்ற பெயரை குறிப்பிட்டு FIR பதிவு செய்திருக்க முடியும்? விசித்திரமாக உள்ளதே? வீடியோ ஆதாரம் இருந்தும் வழக்கை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லாமல் சட்டென முடிக்க வேண்டிய அவசியம் என்ன? விசாரணை நடைமுறைகளிலும் தில்லுமுல்லு தென்படுகிறதே? என கேள்விகளால் துளைத்த நீதிமன்றம் மீண்டும் விசாரணையை துவங்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளின் பிடறியில் ஒரு போடு போட்டது.

வீரமணி கைது
அதன்பிறகுதான் வீரமணி உள்ளிட்ட 4 பேருமே கைது செய்யப்பட்டனர்.

வழக்குப்பதிவு செய்வதற்கு அப்போதைய முதலமைச்சரிடம் க்ரீன் சிக்னல் வாங்கிய காவல் அதிகாரிகள் வழக்கை முடிப்பதற்கான ஒப்புதலை வாங்கவே இல்லை என கூறப்படுகிறது. அதற்கான ஒப்புதலையும் வாங்க வேண்டியது கட்டாயம். ஆனால், அதில்தான் தங்கள் தனித்திறமையையே அதிகாரிகள் காட்டியும், குட்டு உடைந்துவிட்டதாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved