Also Watch
Read this
பழனி கோயில் நில மோசடி வழக்கில், கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்தார். மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்தவர், நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. பழனி கோயில் நில மோசடி வழக்கில் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தவர் என்றும், நிலத்தை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் ஒருங்கிணைத்ததே அன்வர்தீன் தான் என்றும் கூறப்படுகிறது.

நில மோசடியில் முக்கிய துருப்புச்சீட்டு?
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரப் பகுதியில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை 2 கோடி ரூபாய்க்கு மோசடியாக பதிவு செய்தது தொடர்பாக, சார்- பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது. இதில், ஜஸ்டின் மணிகண்டன், தற்போது உடல் நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, பத்திரம் தயார் செய்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோரை காவல்வதுறை கைது செய்துள்ளது.

போலீஸ் காவலில்...
இந்த வழக்கில், கூடுதல் தகவல்களை சேகரிக்கும் விதமாக, கைது செய்யப்பட்ட வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி போலீசார், கடந்த 5ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இந்த காவல் முடிந்த நிலையில், மதுரை மருத்துவமனையில் உடல்நலம் குறித்த பரிசோதனைக்கு பிறகே, அன்வர்தீன் உள்பட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

திடீரென நெஞ்சுவலி
இந்த நிலையில், இரவு 10.30 மணியளவில், அன்வர்தீனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், சிறை அலுவலர்கள் உடனடியாக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். போலீஸ் காவல் விசாரணையில் இருந்தபோது, தினமும் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது.

20 ஆண்டுகளுக்கு மேலாக...
பழநி கோயில் நில மோசடிக்கு தேவையான பல்வேறு ஆவணங்களை வழக்கறிஞர் அன்வர்தீன் தயார் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் இடம் குறித்த ஆவணங்களை கையாளுவதிலும், வழக்கு தொடர்பான நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணை
ஏற்கெனவே இவருக்கு கடந்த பத்தாண்டாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருந்த நிலையில், வாத நோயாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில்தான் பழநி கோயில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் அன்வர்தீன் கைது செய்யப்பட்டார். கோயில் நில மோசடி வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென மதுரை சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்வர்தீன் உயிரிழப்பு குறித்து மதுரை கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved