Also Watch
Read this

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 220 ரன்கள் என்ற பெரிய இலக்கை வெற்றிகரமாக துரத்தி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்தது. அணியின் முன்னணி வீரர்களான மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 60 ரன்களும் அடித்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். ரிஷாப் பந்த் 35 ரன்கள் சேர்த்து அணிக்கு துணைநின்றார்.
சவாலான இலக்கு
பின்னர், 221 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, ஆரம்பத்தில் சீரான தொடக்கம் கிடைத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 ரன்கள் அடித்தார். ஆனால், போட்டியின் திருப்புமுனையாக மாறியது வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டமே.
அவர், வெறும் 38 பந்துகளில் 93 ரன்கள் குவித்து லக்னோ பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அவரது இன்னிங்ஸில் பல பவுண்டரிகளும் சிக்சர்களும் இடம் பெற்றன. அவருடன் இணைந்த த்ருவ் ஜுரேல் 53 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.
3 விக்கெட் இழப்பு, 225 ரன்
இறுதியில், 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பில் 225 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணியின் பந்துவீச்சில் மோசின் கான் மற்றும் ஆகாஷ் சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தாலும், பெரிய இலக்கை காப்பாற்ற முடியவில்லை.
புள்ளிப்பட்டியலில்...
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. பேட்டிங் ஆற்றலால் அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக தன்னை நிரூபித்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved