Also Watch
Read this
அரசியலில் கால் வைத்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஒட்டுமொத்த அரசியல் களத்தையை திரும்பி பார்க்க வைத்த முதலமைச்சர் விஜய்க்கு அவரது மனைவி சங்கீதா தொடுத்திருந்த விவாகரத்து வழக்கு தான் பெரும் சிக்கலாக இருந்து வந்தது. அந்த சிக்கலில் இருந்து மீளும் வகையில் விவாகரத்து வழக்கையே அவரது மனைவி வாபஸ் பெற்று எதிர்பாரா ட்விஸ்ட் அடித்துள்ள நிலையில் அதனை தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக...
முதலமைச்சர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றுள்ள நிலையில், மலைபோல் வந்த சிக்கல் பனிபோல் விலகியதாக தவெகவினர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்களாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்-சங்கீதா இருவருக்கும் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திருமணம் நடந்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பம் நடத்திய சங்கீதா, திடீரென கடந்த ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

விவாகரத்து வழக்கு
இந்த மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒரு நடிகையுடன் தனது கணவர் உறவில் இருப்பதாகவும், நடிகையுடனான தொடர்பை முறித்துக் கொள்ளாமல் தொடர்ந்து பொதுவெளியில் அவருடன் தோன்றி தன்னை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் கூறி இருந்த சங்கீதா 2021 முதல் நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலுமே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், விவாகரத்து வழக்கு முடியும்வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் தனக்கு நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

மூன்று முறை விசாரணை
முதலமைச்சர் விஜய் அரசியலில் கால் பதித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் இறங்கி இருந்த நேரத்தில் தான் அவரது மனைவி விவாகரத்து வழக்கையே தொடுத்திருந்தார். இதுதொடர்பான வழக்கு 3 முறை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஒருமுறைகூட முதலமைச்சரும், அவரது மனைவியும் ஆஜராகவில்லை. கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவருமே பிரபலம் என்பதால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

காணொலியில் ஆஜர்
இருவரது ஈமெயில் ஐடிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு லண்டனில் இருந்து காணொலி வாயிலாக விசாரணைக்கு ஆஜரானார் சங்கீதா. ஆனால், சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றதால் முதலமைச்சரால் ஆஜராக இயலாது எனவும் வேறொரு நாளுக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

எதிர்பார்க்காத வகையில்...
ஆனால், இன்றே ஆஜராக வேண்டும் என சங்கீதா அடம்பிடித்ததாகவும், சுமார் 20 நிமிடங்கள் தன் தரப்பு வாதத்தை முன்வைத்ததாகவும் தெரிகிறது. அதனால், விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இப்படி 2 முறை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் விசாரணை நடந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விவாகரத்து வழக்கையே வாபஸ் பெற்றார் சங்கீதா. இதனால் முதலமைச்சர் - அவரது மனைவி சங்கீதா இடையிலான வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் புதிதாக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய சங்கீதாவுக்கு அனுமதி வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆறுதலில் தவெகவினர்...
முதலமைச்சரின் விவாகரத்து வழக்கால் இத்தனை நாட்களும் இணையத்தில் நடந்த வார்த்தை போருக்கு பதில் சொல்லியும், முன்பின் தெரியாதவர்களுடன் எல்லாம் சண்டையிட்டும் ஓய்ந்த தவெகவினர் தற்போது தான், ’அப்பாடா,’ என நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

அதேபோல், ”செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவி” என அரசியல் தலைவர்கள் செய்த கேலி, கிண்டலுக்கெல்லாம் முற்றுப்புள்ளி கிடைத்து விட்டதாகவும், வாயில் அவலை போட்டு மெல்வதுபோல இனி யாரும் விவாகரத்து விவகாரத்தை அசைபோட முடியாது எனவும் ஆறுதலடைந்துள்ளார்களாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved