Also Watch
Read this
Posted on: Feb 20, 2026 05:27 AM
By: Manigandan Raja
மாட்டிறைச்சி சாப்பிட பெண்ணை கட்டாயப்படுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள, தி கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தின் டிரெய்லரை, கேரள மக்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களே பரோட்டா - மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோவை பகிர்ந்து படக்குழுவினருக்கு தரமான பதிலடி கொடுத்து வரும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.
* கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு
* இந்து பெண்கள் கட்டாய மதமாற்றம் என சித்தரிக்கப்பட்ட படம் - கடும் எதிர்ப்பு
* தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது கொடுத்ததற்கும் எதிர்ப்பு
"ஒரே பாம் ஒட்டு மொத்த சிட்டியும் காலி" என்ற வடிவேலு காமெடி போல, ஒரே ஒரு மாட்டுக்கறி சீனால் ஒட்டுமொத்த டிரெய்லரையும் கலாய்த்து வருகின்றனர் கேரளவாசிகள்.
கட்டாய மதமாற்றம் தொடர்பான படம் என கூறி, கடந்த 2023ல் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு, அப்போதே எதிர்ப்புகள் மற்றும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. கேரளாவில் 32 ஆயிரம் இந்துப் பெண்கள், முஸ்லீம் மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருந்த படத்திற்கு கடந்த ஆண்டு மத்திய அரசின் தேசிய விருது வழங்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
* தி கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
* மாட்டிறைச்சி சாப்பிட பெண்ணை கட்டாயப்படுத்துவது போன்ற காட்சிக்கு எதிர்ப்பு
* தி கேரளா ஸ்டோரி படக்குழுவினருக்கு தரமான பதிலடி கொடுக்கும் மலையாளிகள்
இந்நிலையில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், கமக்யா நாராயண் சிங் இயக்கும் தி கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, மலையாளிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரெய்லரில் வரும் ஒரு சீனில், சிறைபிடிக்கப்பட்ட பெண்ணிடம் மாட்டிறைச்சி சாப்பிட கொடுப்பது போலவும், ஆனால் அதனை சாப்பிட மறுத்த அந்த பெண், சாப்பாடு தட்டை உதைத்து, "பட்டினி கிடந்து சாவேனே தவிர, மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன்" என சொல்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சியை கேரள மக்கள் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் நிலையில், இந்த குறிப்பிட்ட சீன் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது. கேரளாவில் மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடப்படும் உணவு என்பதைக் காண்பிக்கும் வகையில், பெண்கள் பலரும் மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோக்கள் மற்றும் படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
* கேரளாவில் மாட்டிறைச்சி விரும்பி சாப்பிடப்படும் உணவு என்பதை காட்டும் வீடியோ
* பெண்கள் பலரும் மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோக்கள், படங்களை பகிர்ந்து பதிலடி
* உண்மையான கள நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் சீன் எடுக்கப்பட்டதாக கண்டனம்
கேரளாவில், beef-porotta காம்போ பிரபலமாக இருக்கக்கூடிய சூழலில், பரோட்டா உடன் சேர்த்து மாட்டிறைச்சியை சாப்பிடும் வீடியோவையும் பகிர்ந்து, தி கேரளா ஸ்டோரி 2 படக்குழுவினருக்கு தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர். உண்மையான கள நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் இதுபோன்ற காட்சிகளை அமைத்துள்ளதாக சாடிய நெட்டிசன்கள், மலையாள சினிமாவில் ஹிட் அடித்த கோதா, பிரேமம், ஹிருதயம் போன்ற படங்களில் ஹீரோயின்கள் விரும்பி மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
* மலையாள படங்களில் ஹீரோயின்கள் விரும்பி மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோக்கள் பகிர்வு
* தி கேரளா ஸ்டோரி 2 டிரெய்லருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்
* "கேரள மதச்சார்பின்மைக் கொள்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்"
உணவு அரசியலை பேசும், தி கேரளா ஸ்டோரி 2 டிரெய்லருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகமும், கேரளத்தின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும், மாநிலத்திற்கு எதிராக வெறுப்பை பரப்ப திட்டமிட்டு திரைப்படம் எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
* சர்ச்சைக்குரிய காட்சியை ஏஐ மூலம் மாற்றியும் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியீடு
* தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தை எடுத்தவர்கள் முட்டாள்கள் என விமர்சனம்
இதனிடையே சர்ச்சைக்குரிய காட்சியை ஏஐ மூலம் மாற்றியும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அந்த நடிகர்களே குறிப்பிட்ட காட்சியை விமர்சிக்கும் வகையிலான வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மலையாளப் பெண்களைப் பற்றி தெரியாத முட்டாள் இயக்குநர்கள் எடுத்த காட்சி என்றும், இது கேரளா ஸ்டாரி அல்ல; பாஜக முட்டாள் கதை எனவும் சொல்லி, அனைவரும் சேர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சி முடிக்கப்பட்டுள்ளது.
* இது கேரளா ஸ்டாரி அல்ல; பாஜக முட்டாள் கதை என விமர்சித்து ஏஐ வீடியோ
* அனைவரும் சேர்ந்து மாட்டிறைச்சி சாப்பிடுவது போல உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ
இவ்வாறான சீன்களை பார்க்கும்போது, தி கேரளா ஸ்டோரியின் முதல் பாகத்தை போலவே, அதன் 2ஆவது பாகம் வெளியாகும் போதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved