Also Watch
Read this
வீடுகளின் மின் தேவைக்கு சூரிய மின்சக்தி பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு புதிய "மேற்கூரை சூரிய மின்சக்தி மானியத் திட்டத்தை" அறிமுகப்படுத்தி உள்ளது.

மின்கட்டண செலவை குறைக்க...
சூரிய மின்சக்தியின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரு வீட்டின் மாடியிலும் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு குடியிருப்பு கட்டிடம், அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தனி வீடு என பல்வேறு கட்டிடங்களின் மேற்பரப்புகள் மின் உற்பத்திக்கான இடமாக மாறுகின்றன.

வீடுகளின் மாடிகளில் சூரிய மின் தகடுகளை அமைப்பதன் மூலம், பகல் நேரங்களில் வீட்டின் மின் தேவையின் ஒரு பகுதியை சூரிய சக்தியிலிருந்து பெற முடியும். மேலும், வீட்டு மின் கட்டணச் செலவைக் குறைப்பதற்கான ஒரு வழியாகவும் கூரை சூரிய மின்சக்தி பார்க்கப்படுகிறது.

அதிக செலவு
வீட்டில் சூரிய மின் நிலையத்தை நிறுவுவதற்கு ஆரம்பத்தில் கணிசமான தொகை செலவாகும். சோலார் பேனல்கள் மட்டுமல்லாமல் இன்வெர்ட்டர், மவுண்டிங் அமைப்பு, வயரிங், இன்ஸ்டலேஷன், மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன. நீண்ட காலத்தில் மின் கட்டணச் செலவை குறைக்கும் வாய்ப்பு இருந்தாலும், ஆரம்ப முதலீடு அதிகமாக இருப்பதே பல குடும்பங்களுக்கு தடையாக இருந்தது.

ரூ. 1 லட்சம் வரை
இந்நிலையில், வீடுகளின் மாடிகளில் சூரிய மின் நிலையங்களை அமைக்கும் நுகர்வோருக்கு மத்திய–மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்த இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் நிறுவப்படும் சூரிய மின் நிலையத்தின் திறனைப் பொறுத்து, மானியம் வழங்கப்படுகிறது. 1 கிலோவாட்டிற்கு ரூ.35,000, 2 கிலோவாட்டிற்கு ரூ.70,000, 3 கிலோவாட்டிற்கு ரூ.1,00,000 என மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் அறிமுகம்
இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் வீடுகளில் கூரை மேல் சூரிய மின் நிலையங்களை நிறுவ அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகம் (TNPDCL), இத்திட்டத்திற்காக தனி இணையதளத்தை https://www.tnebltd.gov.in/usrp/index_tamil.xhtml உருவாக்கி உள்ளது.

இதில், மானிய விவரங்கள், சூரிய மின் நிலையம் அமைப்பதற்கான வழிகாட்டுதல், விண்ணப்பிக்கும் நடைமுறை, விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, அங்கீகரிக்கப்பட்ட சூரிய மின்சக்தி விற்பனையாளர்களின் பட்டியல், திட்டம் தொடர்பான பிற தகவல்களை அறிந்து கொள்ள முடியும். அந்த இணைய தளத்தின் மூலமே மானியத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved