Also Watch
Read this
By: Web Team

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று கரையை கடக்கும் என்பதால், சென்னை உட்பட 9 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 30ஆம் தேதி உருவான காற்றழுத்த பகுதி ஒன்றாம் தேதி வலுப்பெற்றது. இது, வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்று, இன்று தெற்கு ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் என 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில், ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வங்க கடலில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved