Also Watch
Read this
"சினிமாவில் இருந்து, அரசியலுக்கு வந்தவர்கள் லிஸ்டில் தனது பெயரும் இருக்க வேண்டும்," என்று நடிகர் தனுஷ் விரும்புவதாக கூறப்படும் நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையே மினி அரசியல் மாநாட்டைப் போல் நடத்தியிருக்கிறார்.

விஜய் வரலாற்று வெற்றி
ஜெயலலிதாவுக்கு பிறகு, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த யாரும் பெரிதாய் சோபிக்காத நிலையில், முதலமைச்சர் விஜய் வரலாற்று வெற்றி தனுஷ் போன்ற சில ஹீரோக்களுக்கு அரசியல் ஆசையை தூண்டியிருக்கிறது போல...

சிவகார்த்திகேயன் vs தனுஷ்
சினிமாத்துறையில் விஜயிடம் இருந்து துப்பாக்கி வாங்கிய சிவகார்த்திகேயன், ரஜினியிடம் இருந்து ஆசி வாங்கிய தனுஷ் இடையே தான் இப்போது யார் முதலில் அரசியலுக்கு வருவது என போட்டியே... இடையில் பிரதீப் ரங்கநாதன் போன்ற விஷால் கேரக்டர்களும் எட்டிப்பார்த்தாலும் ஃபேன் மீட், நலத்திட்ட உதவி என இருதரப்புமே மும்முரமாக அரசியலுக்கான அஸ்திவாரத்தை வலுவாக கட்டமைத்து வருகின்றனர்.

தனுஷ் ரசிகர் மன்றம், கொடி...
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனுஷ் ரசிகர் மன்றத்துக்கான கொடியின் புகைப்படம் வெளியாகி, விஜயை போல தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக காட்டுத்தீயாய் விவாதம் பற்றியது. ஏனெனில் விஜயும் இப்படித்தான் முதலில் தனது ரசிகர் மன்றத்துக்கென தனியாக கொடியை அறிமுகம் செய்துவைத்து தனது அரசியல் பாதைக்கு அடித்தளமிட்டிருந்தார். அதற்கேற்றார் போல் தனுஷ், பல ஆண்டுகளாக தூசுபடிந்து கிடந்த தனது ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்தி தீவிரமாக இயங்க தொடங்கினார்.

அரசியல் கட்சி மாநாடா?
வெறும் நிகழ்ச்சி மட்டுமல்லாமல் அவரது தோற்றம், பேச்சு என அனைத்தும் ஒவ்வொன்றாக மாறத் தொடங்கின. இந்நிலையில் தான், தனது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இது ரசிகர் மன்ற விழாவா? அல்லது அரசியல் கட்சி மாநாடா? என வியக்கும் அளவுக்கு வழியெங்கும் ரசிகர் மன்ற கொடி பறக்க விடப்பட்டிருந்தது.

வரிசையாக காலில் விழுந்து...
அரசியல்வாதியை போல், வைட் அண்ட் வைட்டில் நிகழ்ச்சிக்கு வந்தவர், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முத்து படத்தில் வரும் ரஜினியை போல வந்திருந்தவர்களுக்கு உதவிகளை அள்ளி அள்ளி கொடுக்க, பதிலுக்கு மக்களும் வரிசையாக காலில் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல் முறை ஒருவர் காலில் விழும்போதே தடுத்து நிறுத்தி, யாரும் காலில் விழக்கூடாது என மைக்கில் அட்வைஸ் செய்ய வேண்டிய தனுஷோ, கடமைக்கு கைகளால் சைகை காட்டிவிட்டு நின்றுகொண்டிருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

நடிகர் அஜித் டயலாக்...
மேடையில் பேசிய தனுஷ், ராயன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பான சர்ச்சைகள் குறித்து பேசினார். ராயனைவிட தாம் நடித்த பல சிறந்த படங்களே உள்ளதாக ஒப்புக்கொண்ட தனுஷ், ’தமிழனாக 2 விருதுகள் பெற்ற என்னை தட்டி விடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்,’ என்றார். நடிகர் அஜித்தின் டயலாக்கை இடையில் மேற்கோள் காட்டி பேசிய தனுஷ், ’ஏதோ பொறந்தநாள்ல பார்த்தோம், போனோம்னு இல்லாம, நிறைய நலத்திட்டங்கள செய்யுங்க,’ என அட்வைஸ் செய்ததோடு. ’இங்க இவ்ளோ பேர் இருக்கீங்க, அதுக்குன்னு ஒரு பவர் இருக்கு, அத ஒரு பர்பஸா கொண்டு போய் நிறைய பண்ணனும்,’ என அரசியல் பொடி தூக்கலாக பேசி, ’ஓம் நமச்சிவாயா’ எனக்கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

எம்ஜிஆரா? சிவாஜியா?
ஒரு ரசிகர் மன்ற நிகழ்வை முழுக்க முழுக்க அரசியல் மாநாட்டைபோல் நடத்தி தனக்கு இருக்கும் அரசியல் ஆசையை தம்பட்டம் அடிக்காமல் தன்னடக்கத்தோடு காட்டிக் கொண்ட தனுஷின் எதிர்காலம் எம்.ஜி.ஆரை போல் இருக்குமா? அல்லது சிவாஜியை போல் சறுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved