Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 11:45 AM
திமுக கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை என்றும், தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்குமோ?
இதுதொடர்பாக திருமாவளவன் கூறி இருப்பதாவது;
தற்போது நடந்தேறிய தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு இடப்பகிர்வு அளிப்பதில் ஏற்பட்டுள்ள நெருடல், அக்கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. அதேவேளையில் மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவோம் என்றும் அறிவித்து உள்ளது. இது அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவரின் நாகரிகமான அணுகுமுறை என நாம் பெருமிதப்பட்டாலும், நம் கூட்டணியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்குமோ? என்கிற அச்சம் மேலிடுகிறது.

தோழமை கட்சிகளின் பேரூதவி
தோழமை கட்சிகள் தாமே விரும்பி கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பினால், அதனை ஏற்றுக் கொள்ளவது அக்கட்சிக்குச் செய்யும் பேருதவி. அதேவேளையில், தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமை கட்சிகளை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக தலைமை வகிப்போரின் சின்னங்களில் போட்டியிடக் கோருவது, ஏற்புடையதல்ல. இது, அவர்களின் சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளை முடக்கி போட்டுவிடும். கூட்டணியின் தலைமை தோழமை கட்சிகளின் அத்தகைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு செலுத்தும் பெருமதிப்பாக அமையும்.

'அவ்வாறு விட்டு விடமாட்டோம்'
இந்த நெருக்கடியான சூழலில், மதவாத திரிபுவாத வலதுசாரி கும்பலை வீழ்த்த வேண்டிய இந்த அறப்போரில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் நம்மைப் போலவே தேர்தலில் போட்டியிடும் ஒரு பங்கேற்பாளராக நம்மோடு கைகோர்த்துக் களமாடவேண்டும். அதாவது அண்ணன் கமல்ஹாசன் தங்கள் தலைமையில் கொள்கை பகை வீழ்த்த கருத்தியல் வாளேந்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடாது என முடிவெடுப்பது அவரது பெருந்தன்மையாக இருக்கட்டும். மதவெறி எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் கருத்தியல் வலிமையும், நான்கு சதவீத அளவில் உறுதிப்படுத்தப்பட்ட 'வாக்கு வங்கி வலிமையும்', தமிழ்ச் சமூகத்தில் பெரும் செல்வாக்கு என்னும் உயரிய 'நன்மதிப்பு வலிமையும்' கொண்ட அண்ணன் கமல்ஹாசனை, 'அவ்வாறு விட்டு விடமாட்டோம்' என அவரை அரவணைத்துக் கொள்ள வேண்டியது தங்களின் உயரிய மாண்பாக அமையட்டும்.

சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்
தொகுதிகளின் எண்ணிக்கை எதுவானாலும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 'டார்ச்' சின்னத்தில்' போட்டியிட அனுமதித்து, கூட்டணியின் மீதான நன்மதிப்பையும் தங்களின் மீதான பெருமதிப்பையும் மென்மேலும் உயர்த்திட வேண்டும் என தோழமையோடும் தங்களின் உடன்பிறப்பு என்னும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் 'வெல்வோம் ஒன்றாக' என்கிற தங்களின் உன்னதம் வாய்ந்த சகோதரத்துவ முழக்கம் வெற்றிகரமாக முழுமையுறும்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved