Also Watch
Read this
ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தியையும், அவரது கணவரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை முடிந்து அழுதபடியும், துப்பட்டாவால் தனது தலை மற்றும் முகத்தை மூடியபடியும் காவல் வாகனத்தில் ஏறிய சாந்தியிடம் நியூஸ் தமிழ் செய்தியாளர் மதியழகன் கேள்வி எழுப்ப, "நாங்கள் அப்பாவிகள்" என அவர் ஒருவார்த்தையில் பதிலளித்தார்.

போக்சோ வழக்கில்...
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் வீரமணி, வாடகை வீட்டில் தங்கி இருந்து பணிவிடைகள் செய்துவந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், உதவியாளர் கணேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், சாந்தியும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹனும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விசாரிக்க வேண்டும்
வீரமணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும், மொத்தம் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்? எவ்வளவு நாட்களாக பாலியல் குற்றம் நடந்தது? இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு? என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என, அந்த மனுவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர்.

மூன்று நாட்கள் காவல்
இந்த மனு நீதிபதி பத்மா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாந்தியும் அவரது கணவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். போக்சோ வழக்கு என்பதால் குற்றம்சாட்டப்பட்டவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் இருதரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி, இருவரையும் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

அழுதபடியே வந்த...
மேலும், தினமும் ஒரு முறை வழக்கறிஞரை சந்தித்துக் கொள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனுக்கு அனுமதியளித்த நீதிபதி, விசாரணைக்கு பின் வரும் ஞாயிற்று கிழமை மாலை மீண்டும் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதனிடையே, விசாரணை முடிந்து நீதிமன்ற அறையில் இருந்து அழுதபடியே வெளியே வந்த சாந்தியை அவரது கணவர் தேற்றினார். லிப்ட் மூலமாக இருவரையும் மூன்றாவது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

நாங்கள் அப்பாவிகள்...
நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு கேமராவும் கையுமாக பத்திரிகையாளர்கள் காத்திருப்பதை அறிந்த சாந்தி துப்பட்டாவால் தனது தலையுடன் சேர்ந்து முகம் முழுக்க மூடிக் கொண்டார். அதன்பிறகு, இருவரும் காவல் வாகனத்தில் ஏற, வீரமணி விவகாரத்தில் உங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன? என நியூஸ் தமிழ் செய்தியாளர் மதியழகன் கேள்வி எழுப்பினார்.அதற்கு, we are innocent என்ற ஒரே வார்த்தையை மட்டும் சாந்தி பதிலளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved