Also Watch
Read this
தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

நேற்று காலை முதலே ஏராளமான இளைஞர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
தலைநகர் சென்னையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு

பட்டினப்பாக்கம், நீலாங்கரை, திருவொற்றியூர் கடற்கரைகளில் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக மாநகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கிரேன் உதவியுடன் கரைப்பு
சென்னை தண்டையார்பேட்டை,கொருக்குப்பேட்டை ,வியாசர்பாடி, முல்லை நகர், கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் வீதிகளில் வைத்து வழிபட்ட 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காசிமேடு கடற்கரையில் கரைக்கப்பட்டன. 100 அடி மற்றும் 50 அடி அடி உயர் கிரேன் உதவியுடன் சிலைகள் கரைக்கப்பட்டன.

இளைஞர்கள், சிறுவர்கள் நடனமாடி கொண்டாட்டம்
மாமல்லபுரம் கடற்கரையில் 450க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலோர காவல் படை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் கரைக்கப்பட்டன. பேண்ட் வாத்தியம் மற்றும் தாரை தப்பட்டை உடன் இளைஞர்கள் சிறுவர்கள் நடனமாடி சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 1000க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், தப்பாட்டம், செண்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒசூர் ராமநாயக்கன் ஏரி, தர்கா ஏரிகளில் கரைக்கப்பட்டன.

தற்காலிக குளத்தில்...
நெல்லை மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வண்ணாரப்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குளத்தில் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

விநாயகர் ஊர்வலத்தின் போது...
சென்னை கொரட்டூரில் 85 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது, பாடி-அம்பத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்ததால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

வாக்குவாதம், பேச்சுவார்த்தை...
சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறை தடுப்பு வேலிகளை வைத்து வேறுவழியில் செல்லுமாறு கூறியும், இந்து முன்னணியினர் மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved