Also Watch
Read this
கர்நாடக முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டது ஏன்? என்பது குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து உள்ளார். அண்டை மாநிலத்துடன் இணக்கமான போக்கை ஏற்படுத்த வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் முயன்றதாக கூறி உள்ளார். முதல்வர் சிவகுமாரை சந்திக்க திட்டமிட்டது குறித்து விளக்கம் தந்த முதல்வர் விஜய், நல்லெண்ண அடிப்படையில் சந்திப்பிற்கு திட்டமிட்டதாக கூறினார்.
காவிரி பிரச்சனையை முன் வைத்து அரசியல் செய்ய நினைக்கவில்லை என்று கூறிய முதலமைச்சர் விஜய், பகை நாடுகளே பேச்சுவார்த்தை நடத்தும் போது, அண்டை மாநிலத்துடன் ஏன் பேசக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.
கர்நாடகத்திற்கு சென்று அவமானம் ஏற்படும் என்றால் மக்களுக்காக அதையும் ஏற்க தயார் என்ற முதலமைச்சர் விஜய், மேகதாது, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

முதலில் யோசித்தது நான் தான்
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய் கூறியதாவது;
மேகதாது அணை கட்ட எந்த அனுமதியும் தரக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். காவிரி பிரச்சனை உணர்வு ரீதியான பிரச்சனை, உயிர் ஆதாரம். தமிழ்நாட்டின் உரிமையை அரசு எப்போதும் விட்டுக் கொடுக்காது. காவிரி நீர் விவகாரத்தை சட்டப்படி அணுகுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை.

பேசிப் பார்த்தால் என்ன?
இருந்தாலும், ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாம் என்று திட்டமிடப்பட்டது தான் பெங்களூரு பயணம். அப்படி ஒரு பயணம் குறித்து முதலில் யோசித்தது நான்தான். ஆனால், பெங்களூரு செல்ல நினைத்தது குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்தன. இன்றைய காலத்தில் பகை நாடுகளே பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளப் பார்க்கின்றன. அப்படி இருக்கும்போது பக்கத்து மாநிலத்தோடு பேசிப் பார்த்தால் என்ன? என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த முயற்சியை எடுக்க முன்வந்தேன்.

அவமானத்தை தாங்கிக்கொள்ள தயார்
‘ஒருவேளை அந்த முயற்சியில் உங்களுக்கு அவமானம் நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள நான் தயாராகத் தான் இருந்தேன். இருந்தாலும், என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும் எனது நன்றி. காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் கூடுதல் விளக்கம் தருவார். அதேபோல, காவிரிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விவசாயத்துறை அமைச்சர் விரிவான பதிலளிப்பார்.

எந்த மாற்றமும் இல்லை
குறுவை சாகுபடிக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எதிர்க்கட்சித் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே குறுவை சாகுபடி பாதிப்புகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது. ‘அரசியலே நாங்கள் தான்’ என்று கூறிக் கொள்பவர்களுக்கு இதுகூட தெரியாமல் போய்விட்டது வியப்பாக இருக்கிறது.

முன் பின் பேப்பர் படித்திருந்தால் இவை அனைத்தும் தெரிந்திருக்கும். காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாக அணுகுவதில் எந்த மாற்றமும் இல்லை
இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.