news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மருந்துகளின் விலை, பகல் கொள்ளையை தடுக்குமா மத்திய அரசு?
tv

Also Watch

மருந்துகளின் விலை, பகல் கொள்ளையை தடுக்குமா மத்திய அரசு?

அரசு ஏன் மௌனம் காக்கிறது?

35

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

“ஒரு மருந்தை ₹2,700க்கு வாங்கி, அதற்கு ₹27,000 MRP நிர்ணயிப்பது பகல் கொள்ளை, வழிப்பறி இல்லையென்றால் வேறு என்ன?” — மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்தக் கேள்வி, இந்தியாவின் சுகாதாரத் துறையில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு அடிப்படைப் பிரச்சினையை மீண்டும் தேசிய விவாதத்துக்குக் கொண்டு வந்து உள்ளது. அனைத்து மருந்துகளையும் விலை கட்டுப்பாட்டு கொள்கையின் கீழ் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

₹2,700 மருந்து எப்படி ₹27,000 ஆனது?
மருந்துகளின் விலை நிர்ணயத்தில் நீதிமன்றம் தலையிட்டு, நோயாளிகளுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.சி.ஜெயின் மற்றும் ஆக்ராவைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் சஞ்சய் குல்ஷ்ரேஸ்தா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் விசாரணையின்போதே, மருந்துகளின் MRP மற்றும் உண்மையான விலைக்கு இடையிலான மிகப்பெரிய வேறுபாடு குறித்து நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு கேள்வி எழுப்பியது.

வர்த்தக பொருள் அல்ல
நோயாளிக்கு மருந்து என்பது வணிகப் பொருள் மட்டுமல்ல. அது உயிரைக் காப்பாற்றுவதற்கான அத்தியாவசியத் தேவை. குறிப்பாக புற்றுநோய், இதய நோய், தீவிர நோய்த்தொற்று போன்றவற்றுக்கான மருந்துகளைத் தவிர்க்கவோ, பின்னர் வாங்கிக்கொள்ளவோ முடியாது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நோயாளி, அதன் விலையைப் பற்றி பேரம் பேசும் நிலையில் இருப்பதில்லை. இந்த நிலையில்தான் மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பத்து மடங்கு அதிகரிப்பு
நீதிமன்றம் குறிப்பிட்ட உதாரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. பெயர் குறிப்பிடப்படாத ஒரு புற்றுநோய் மருந்தை உற்பத்தியாளர் சில்லறை விற்பனையாளருக்கு ₹2,700க்கு வழங்குவதாகவும், அதே மருந்தின் அதிகபட்ச சில்லறை விலை ₹27,000 என அச்சிடப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக் ட்டியது. அதாவது, சில்லறை விற்பனையாளருக்கான விலையை விட MRP சுமார் பத்து மடங்கு அதிகமாக இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

மருந்தின் உற்பத்திச் செலவு, நிறுவனத்தின் லாபம், விநியோகச் செலவு, மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளரின் மார்ஜின், வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மருந்தின் இறுதி விலையை நிர்ணயிக்கின்றன. ஆனால், ஒரு மருந்தின் உற்பத்தியாளர் விலை மற்றும் நோயாளி செலுத்த வேண்டிய அதிகபட்ச விலை இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகும்போது, அந்த இடைவெளி எதனால் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.

அரசு ஏன் மௌனம் காக்கிறது?
மருந்து நிறுவனங்களாலும், சில்லறை மருந்து விற்பனையாளர்களாலும் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் சுரண்டப்படுவது குறித்து அதிர்ச்சி வெளியிட்ட உச்ச நீதிமன்றம், வசூலிக்கப்படும் அதிகப்படியான விலை பகல் கொள்ளையைத் தவிர வேறில்லை என்று தெரிவித்தது. மேலும், குடிமக்கள் எதிர்கொள்ளும் இந்த முக்கியமான பிரச்சினையில் அரசாங்கம் ஏன் மௌனம் காக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியது.

மக்கள் மருந்தகம், பரிந்துரை
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, மக்கள் மருந்துகளை வாங்குவதற்காக தங்களின் சொத்துக்களையும் நகைகளையும் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதால், மருந்துகளின் விலை நிர்ணயம் மிகவும் முக்கியமானது என்று கூறியது.

அனைத்து மருந்துகளையும் விலை கட்டுப்பாட்டு முறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும், அரசாங்கத்தின் நிதியுதவி பெறும் 'ஜன அவுஷதி கேந்திராக்கள்' எனப்படும் மக்கள் மருந்தகங்கள் மூலம் அவை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

நோய்க்கு எதிரான போராட்டமா? விலைக்கு எதிரான போராட்டமா?
மருந்து நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலை மற்றும் வெளிச்சந்தையில் நோயாளிகள் செலுத்தும் விலை இடையே சில மருந்துகளில் 10 முதல் 16 மடங்கு வரை வித்தியாசம் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், நிறுவனங்கள் அநியாயமான லாபம் ஈட்டவில்லை என்று வாதிட்டார். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் அரசின் மௌனத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

பொது மக்களின் எதிர்பார்ப்பு
மருந்து நிறுவனங்கள் தங்களது விலையை நிர்ணயிக்க வேண்டும். சில்லறை விற்பனையாளர்கள் நியாயமான வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மருத்துவமனைகளும் நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் மருந்து விலைகளில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்.

அதே நேரத்தில், அரசு விலை நிர்ணய அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்; விதிமுறைகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும்; விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Related Link
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, நுகர்வோர் கண்ட பலன் என்ன?

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு, நுகர்வோர் கண்ட பலன் என்ன?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved