news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜின்பிங் இந்திய பயணம், சீனாவுடன் புதிய அத்தியாயமா?
tv

Also Watch

ஜின்பிங் இந்திய பயணம், சீனாவுடன் புதிய அத்தியாயமா?

இந்தியா–சீனா உறவுக்கான புதிய மேடை

36

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தது, வெறும் BRICS மாநாட்டில் பங்கேற்கும் ஒரு அரசுமுறைப் பயணம் மட்டும் அல்ல. இந்தியா–சீனா உறவில் கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவி வந்த பதற்றத்துக்குப் பிறகு, இரு நாடுகளும் மீண்டும் உரையாடலுக்கான கதவைத் திறந்துள்ளன என்பது புவிசார் அரசியலில் மிக முக்கியமான முன்னேற்றமாகும். மேலும் அதிபர் ஜின்பிங்–பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியதும் இந்தியா–சீனா உறவின் எதிர்காலத்தைக் செம்மைப்படுத்தும் முக்கிய தருணமாக மாறியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு திரும்பும் ஆசிய சக்திகள்
இந்தியா–சீனா உறவில் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்று வர்த்தகம். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் இருந்தாலும், இந்தியாவுக்கு சீனாவுடன் தொடர்ந்து பெரிய வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது.

இந்தியாவுக்கு சீனாவிலிருந்து மின்னணு பொருட்கள், இயந்திரங்கள், ரசாயனங்கள், தொழில்துறை உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அதிக அளவில் வருகின்றன. சீனச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்குமா? என்பது இந்தியாவின் கேள்வி. இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கான முதலீட்டு சூழல் எவ்வாறு மாறும்? என்பது சீனாவுக்கு இருக்கும் கேள்வி. இதைத் தாண்டி எல்லையில் அமைதி இருந்தால்தான் இருதரப்பு உறவு இயல்பாகும்.

இருதரப்பு உறவுகள் பாதிப்பு
2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியா–சீனா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எல்லையில் ராணுவ பதற்றம் அதிகரித்தது மட்டுமின்றி, வர்த்தகம், முதலீடு, நேரடி விமானப் போக்குவரத்து, விசா உள்ளிட்ட பல துறைகளிலும் அதன் தாக்கம் தெரிந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமை மெதுவாக மாறத் தொடங்கி உள்ளது. 2024ல் எல்லைப் பிரச்சினையில் படை விலகல் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் அதிகரித்தன. நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை இயல்பாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பின்னணியில் தான் ஜின்பிங்கின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பொருளாதார விவகாரம்
மோடி–ஜின்பிங் சந்திப்பில் எல்லைப் பிரச்சினை, வர்த்தகப் பற்றாக்குறை, சீன முதலீடுகள், இந்தியச் சந்தைக்கான அணுகல், தொழில்நுட்பம், விசா நடைமுறை, இரு நாடுகளுக்கிடையிலான விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதார விவகாரங்கள் இடம்பெற்றன. ஆனால், இந்தியாவுக்கு ஒரு தெளிவான கணக்கு உள்ளது. எல்லையில் அமைதி வேண்டும், ஆனால் பாதுகாப்பில் சமரசம் வேண்டாம். சீனாவுடன் வர்த்தகம் வேண்டும்; ஆனால் பொருளாதார சார்பு அதிகரிக்கக் கூடாது. முதலீடு வேண்டும்; ஆனால் முக்கியமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் துறைகளில் கட்டுப்பாடு அவசியம்.

இந்தியா–சீனா உறவுக்கான புதிய மேடை
BRICS இன்று இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளை ஒரே மேடையில் கொண்டுவரும் அமைப்பாக வளர்ந்து உள்ளது. உலக மக்கள் தொகையில் மிகப்பெரிய பங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கூட்டமைப்பு, உலக பொருளாதாரம், வர்த்தகம், நிதி அமைப்பு மற்றும் புவிசார் அரசியலில் மேற்கத்திய ஆதிக்கத்திற்கு மாற்றான குரலை உருவாக்க முயற்சித்து வருகிறது. இந்தியாவின் BRICS தலைமைப் பொறுப்பு 2026ல் இருப்பது இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. சீனாவுக்கு BRICS ஒரு முக்கியமான புவிசார் அரசியல் கருவி. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் கொண்ட சர்வதேச அமைப்புகளுக்கு மாற்றாக, வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்துவது சீனாவின் நீண்டகால நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தியாவின் கொள்கை
இந்தியாவுக்கும் BRICS முக்கியமானது. ஆனால் இந்தியாவின் அணுகுமுறை சீனாவிலிருந்து வேறுபட்டது. இந்தியா அமெரிக்காவுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் உறவைத் தொடர்கிறது. அதே நேரத்தில் ரஷ்யாவுடனான பாரம்பரிய உறவையும் பராமரிக்கிறது. BRICS-ஐயும் கைவிடவில்லை. இதுதான் இந்தியாவின் “பல திசை வெளியுறவுக் கொள்கை”.

ஜின்பிங்குக்கு இந்தியா ஏன் முக்கியம்?
இந்தியா உலகின் மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று. சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. இந்தியாவுடன் உறவு சீராக இருப்பது சீனாவுக்கு ஆசியாவில் தனது பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலையை வலுப்படுத்த உதவும். மேலும் BRICS போன்ற அமைப்புகள் வலுப்பெற வேண்டுமெனில் இந்தியாவின் ஒத்துழைப்பு சீனாவுக்கு அவசியம். அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாகச் செல்லும் சூழலில், இந்தியாவுடனான உறவை முற்றிலும் மோசமாக்குவது சீனாவுக்கு சாதகமானதாக இருக்காது. எனவே இந்தியாவுடன் போட்டியிடலாம்; ஆனால் இந்தியாவை முற்றிலும் எதிரியாக மாற்றிக் கொள்ள முடியாது என்பதுதான் சீனாவின் எண்ணம்.

எல்லை, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, பாகிஸ்தான், இந்தோ-பசிபிக், QUAD என பல அடுக்குகளில் இரு நாடுகளிடையே போட்டி நீடிக்கிறது. ஆனால் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மோதலிலிருந்து உரையாடலுக்கு இரு நாடுகளும் நகரத் தொடங்கியுள்ளன. அதுவே ஜின்பிங்கின் இந்தியப் பயணத்தின் மிகப்பெரிய அரசியல் செய்தி.


Related Link
பிரிக்ஸ் மாநாடு, இந்தியாவில் மையம் கொள்ளும் உலக அரசியல்

பிரிக்ஸ் மாநாடு, இந்தியாவில் மையம் கொள்ளும் உலக அரசியல்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

180 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க உத்தரவு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved