சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்ட ஜோகோவிச் முதல் செட்டை 7-க்கு 6 என வென்றார்.
2வது செட்டில் டி மினார் 1-க்கு 0 என முன்னிலை பெற்றபோது, காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால், ஜோகோவிச் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர்: அல்காரஸ் சாம்பியன்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் ஜிரி லெஹெகாவை எதிர்கொண்ட அல்காரஸ் 7-க்கு 6, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
காயத்தால் சில தொடர்களில் பங்கேற்காமல் இருந்த அல்காரஸ் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.