Also Watch
Read this
By: Manigandan Raja

பழனி அருகே பழைய ஆயக்குடியில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு உரிய கன்னிகாபரமேஸ்வரியம்மன் மடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமாக கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி போன்ற இடங்களில் பல ஏக்கரில் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளது.
இதில் புதுஆயக்குடியில் இருந்த குறிப்பிட்ட ஒரு நிலம் கடந்த பல வருடங்களுக்கு முன் ஒரு நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த சமுதாயத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மற்றொரு நிலமும் தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலம் குறித்து திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பழனி பத்திரப்பதிவுத்துறைக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடத்தை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியும் மேற்படி நிலமானது கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து தரப்பட்டுள்ளது.

பழனிக்கோயில் மடத்து நில பிரச்னையில் முறைகேடான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனே இந்த பத்திரப்பதிவையும் செய்து கொடுத்துள்ளார். மேலும், பத்திரத்தை தயார் செய்து கொடுத்தது தற்போது சிபிசிஐடியில் சரணடைந்துள்ள ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரது ஜேபி அசோசியேட் என்ற நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வெறும் ஒன்பது இலட்சத்துக்கு கிரையம் செய்ததாக பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பழனிக்கோயில் நிலத்தை முறைகேடான ஆவணங்கள் மூலம் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்தது வெளியான நிலையில் தற்போது ஆயக்குடி கன்னிகாபரமேஸ்வரியம்மன் மடத்து இடத்தையும் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, தமிழக இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும், வருவாய்த்துறையும் இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால் மடத்துக்கு சொந்தமான பிற நிலங்களும் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved