Also Watch
Read this
நேட்டோ அமைப்பின் முன்னணி நாடாகவும், உலகளவில் பெரும் ராணுவ பலம் கொண்ட வல்லரசாகவும் திகழும் பிரான்ஸில், மாணவர்கள் சாலைகளில் இறங்கி போராடி வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிதி இல்லையா?
’ராணுவத்திற்கும் பாதுகாப்புக்கும் பில்லியன்களில் நிதி ஒதுக்கும் அரசுக்கு, எங்கள் வகுப்பறைகளை சீரமைக்கவும் ஆசிரியர்களை நியமிக்கவும் நிதி இல்லையா?’ என்ற கேள்வியோடு மாணவர்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டம், பிரான்ஸின் கல்வி முறையில் உள்ள பல முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பிரான்ஸின் கல்வி நிதி நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் Parcoursup முறையின் பின்னணி என்ன?

ஆறாவது பொருளாதார நாடு
உலகளவில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாகவும், நவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையில் அசுர பலம் கொண்ட நாடாகவும் விளங்கும் பிரான்ஸ், தனது உள்நாட்டு சமூக நல திட்டங்களிலும், கல்வித் துறையிலும் கடுமையான நிதியிழப்பைச் சந்தித்து வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு சவால்கள் காரணமாக, பிரான்ஸ் அரசு தனது தேசிய வரவு செலவு திட்டத்தில் ராணுவச் செலவினங்களை கணிசமாக உயர்த்தி உள்ளது.
அதேநேரத்தில், நாட்டில் அதிகரித்து வரும் அரசு கடன் சுமையைச் சமாளிக்க, பொதுச் சேவைகளுக்கான நிதியைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது நேரடியாக அந்நாட்டின் கல்வித்துறையை பெரிதும் பாதித்துள்ளது.
கல்வி புறக்கணிப்பு
கல்வித் துறைக்கான நிதியைத் தொடர்ந்து குறைத்து வருவதால், பிரான்ஸ் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இதனால் வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து, போதிய இருக்கைகள் கூட இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், பழமையான பள்ளி கட்டடங்களை பராமரிக்க நிதி ஒதுக்கப்படாததால், கோடைகாலங்களில் நிலவும் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு பள்ளிகளின் கட்டமைப்பே சீர்குலைந்துள்ளது. பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அரசு, நாட்டின் எதிர்காலமான கல்வியைப் புறக்கணிக்கிறது என்பதே மாணவர்கள் எழுப்பும் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது.

கணினி தேர்வு முறை
இந்த போராட்டத்தின் மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது, பிரான்ஸ் உயர்கல்வி சேர்க்கைக்காகப் பயன்படுத்தப்படும் Parcoursup என்ற கணினி தேர்வு முறை. பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக 2018ஆம் ஆண்டு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அல்காரிதம் அடிப்படையில் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு பல்கலைக்கழக இடங்களை ஒதுக்குவதுதான் இந்த புதிய நடைமுறை. ஆனால், வெளிப்படைத்தன்மையற்ற இந்த கணினி தேர்வு முறை, எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும், நகர்ப்புறம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படிக்கும் மாணவர்களையும் பிரித்துப் பார்ப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போராட்டம் தீவிரம்
பார்கோர்சப் அமைப்பின் சிக்கலான செயல்பாட்டால் ஆயிரக்கணக்கான திறமையான மாணவர்கள் அவர்கள் விரும்பிய மேற்படிப்பு இடங்கள் கிடைக்காமல் நிராகரிக்கப்படுகிறார்கள், அல்லது நீண்ட காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுகிறார்கள்.
இது மாணவர்களிடையே கடுமையான மன அழுத்தத்தையும் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறைகளில் நிலவும் உள்கட்டமைப்பு சீர்கேடு ஒருபுறம், பல்கலைக்கழகச் சேர்க்கையில் நிலவும் இந்த அநீதியான பார்கோர்சப் முறை என இரட்டை பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாணவர்கள், இந்த அமைப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது மாணவர் சேர்க்கையை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உடன் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உண்மையான வலிமை
ராணுவ பலம் மட்டுமே ஒரு நாட்டின் வல்லரசுத் தன்மையை நிர்ணயித்துவிட முடியாது என்பதையும், கல்வி மற்றும் சமூக நலன்களில் செய்யும் முதலீடே ஒரு நாட்டின் உண்மையான வலிமை என்பதையும் பிரான்ஸ் மாணவர்களின் இந்தப் போராட்டம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved