ரஷ்யா-உக்ரைன் போரில் முக்கியத் திருப்பமாக, இரு நாடுகளும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தப் போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பு தமக்கு எதிர்பாராத ஒன்று எனக் கூறியுள்ளார்.
ஐந்தாவது ஆண்டை எட்டிய ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யாவில், உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ட்ரோன் தயாரிப்பு மற்றும் அவற்றை இயக்குவதற்கான பயிற்சிகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே ராணுவப் பயிற்சி, முதலுதவி மற்றும் தேசப்பற்று தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஓமன் வளைகுடாவில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்
ஓமன் வளைகுடாவில், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீற முயன்ற சரக்குக் கப்பல் மீது அமெரிக்கப் போர் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன் சென்ற அந்தக் கப்பலின் பின்பகுதி தாக்கப்பட்டதில், அதன் இயந்திர இயக்கம் முடக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.